2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருப்பூரில் கத்தியை காட்டி பணம் பறித்த வழக்கில் வாலிபர் உள்பட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-07-10 17:24 GMT
திருப்பூர்
திருப்பூரில் கத்தியை காட்டி பணம் பறித்த வழக்கில் வாலிபர் உள்பட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 
பணம் பறிப்பு
திருப்பூர் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட வெங்கமேடு அருகே கடந்த ஆண்டு மே மாதம் 13-ந் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கத்தியை காட்டி செல்போன் மற்றும் பணம் பறித்த வழக்கிலும், கடந்த ஜூன் மாதம் 10-ந் தேதி போயம்பாளையம் பிரிவில் வேணுகோபால் என்பவர் நடந்து சென்ற போது இருசக்கர வாகனத்தில் சென்று கத்தியை காட்டி செல்போன்  கேட்டு மிரட்டிய வழக்கிலும் விருதுநகர் மாவட்டம் சிவகாசி எம்.புதுப்பட்டி சேர்ந்த விக்னேஷ் (வயது 25) என்பவரை அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விக்னேஷ் மீது அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் 3 வழிப்பறி வழக்குகளும், 3 கஞ்சா வழக்குகளும், ஒரு அடிதடி வழக்கும், திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் உள்ளன.
குண்டர் சட்டம்
பொது மக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் விக்னேசை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவிட்டார்.
அதன்படி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்னேசிடம் ஓர் ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது.
31 பேர் கைது
திருப்பூர் மாநகரத்தில் பொது அமைதிக்கும், பொதுமக்களுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 31 பேர் இந்த ஆண்டில் இதுவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மூலனூர்
இதே போல்  மூலனூர் அருகே உள்ள மல்லம்பாளையம்      ஒத்த மாந்துறை  கிராமத்தை சேர்ந்தவர் தனபால் (50). மணல் திருடிய வழக்கில் போலீசார் தனபாலை  கைது செய்தனர். இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், கலெக்டர் வினீத்-க்கு பரிந்துறை செய்தார். இதையடுத்து கோவை மத்திய சிறையில் உள்ள தனபாலுக்கு, குண்டர் சட்டத்தின் கைது செய்யப்பட்டதற்கான ஆணை வழங்கப்பட்டது. 

மேலும் செய்திகள்