கடலூர் துறைமுகம் அருகே விதிகளை மீறி மீன்படித்த விசைப்படகு வலைகள் பறிமுதல் மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
கடலூர் துறைமுகம் அருகே விதிகளை மீறி மீன்படித்த விசைப்படகு வலைகளை மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடலூர் முதுநகர்,
கடலூர் துறைமுகத்தில் இருந்து எஸ்.டி.பி., ஐ.பி. உள்ளிட்ட வகை விசைப்படகுகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் 5 நாட்டிக்கல் மைல் தூரத்திற்குள் மீன் பிடிக்கக் கூடாது,
240 கீழ் உள்ள குதிரைத்திறன் கொண்ட என்ஜின்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், மீன்பிடி வலைகளில் கண் அளவு 40 மில்லி மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும் என்றும் விதி முறைகள் உள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
விசைப்படகை மடக்கி பிடித்தனர்
இந்நிலையில் இணை இயக்குனர் காத்தவராயன் உத்தரவின்பேரில், உதவி இயக்குனர் வேல்முருகன் தலைமையில், மீன்வளத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக, மாவட்டத்திலுள்ள 269 விசைப்படகுகளில் ஆய்வு மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.
நேற்று காலை கடலூர் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர காவல்படையினர் கடலூர் துறைமுகம் அருகே உள்ள கடற்கரை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடலூர் துறைமுகத்தில் இருந்து 5 நாட்டிக்கல் மைல்களுக்குள் மீன்பிடித்து கொண்டிருந்த விசைப்படகை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.
தொடர்ந்து அந்த படகில் அதிகரிகள் ஆய்வு செய்த போது, அந்த விசைப்படகில் இருந்த மீன்பிடி வலைகளின் கண்அளவு 40 மில்லி மீட்டர் கீழே இருப்பது மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
பறிமுதல் நடவடிக்கை
இதையடுத்து அந்த விசைப்படகை அதிகாரிகள் கடலூர் துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் அதில் இருந்த மீன்களை ஏலம் மூலம் ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்தனர். தொடர்ந்து, மீன்பிடிக்க பயன்படுத்தப்பட்ட ரூ.30 ஆயிரம் மதிப்பிலான மீன்பிடி வலையை பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக அந்தப் படகு உரிமையாளரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும், சட்ட விதிகளுக்கு உட்பட்டு மீன்பிடிப்பது, வலைகளையும் மாற்றிய பின்னர் தான் அந்த படகில் சென்று மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படும் என்று மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.