உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறையின் நிலுவை மனுக்கள் மீது 15-ந் தேதிக்குள் நடவடிக்கை

உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறையின் நிலுவை மனுக்கள் மீது 15-ந் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு, கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

Update: 2021-07-10 17:22 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறையின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்து துறை  அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-

உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறையின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மனுக்கள் தள்ளுபடி அல்லது நிராகரிப்பு செய்யப்பட்டதற்கான காரணம் தெளிவாக இருக்க வேண்டும். நிலுவையில் உள்ள மனுக்கள் மீது வருகிற 15-ந் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமும் ஏதேனும் மனுக்கள் வந்து உள்ளதா என்று அலுவலர்கள் கண்காணித்து, பெறப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை தலைவர் நேரடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நீலகிரியில் பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்று வரும் திட்ட பணிகளை நிர்ணயிக்கப்பட்ட கால நேரத்திற்குள் முடிக்க வேண்டும். அரசு அலுவலகங்களை அவ்வப்போது சுத்தம் செய்வது, அலுவலர்கள் அடிக்கடி கை கழுவுவது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். அரசு திட்டங்கள் பொதுமக்களை சென்றடைய அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா, மாவட்ட வன அலுவலர் (கூடலூர்) கொம்மு ஓம்காரம், மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, சப்-கலெக்டர்கள் மோனிகா, தீபனா விஸ்வேஸ்வரி, கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் சரவண கண்ணன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்