அகழாய்வில் செங்கலால் கட்டப்பட்ட கழிவுநீர் வடிகால் அமைப்பு கண்டுபிடிப்பு
ஏரல் அருகே சிவகளையில் நடந்து வரும் அகழாய்வு பணியில் செங்கலால் கட்டப்பட்ட கழிவுநீர் வடிகால் அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
ஏரல்:
சிவகளையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் செங்கலால் கட்டப்பட்ட கழிவுநீர் வடிகால் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அகழாய்வு பணிகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் சிவகளை, ஆதிச்சநல்லூர் மற்றும் கொற்கை ஆகிய மூன்று இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. சிவகளையில் கடந்த பிப்ரவரி 26-ந் தேதி 2-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது. இதில் சிவகளை பரம்பு பகுதியில் தற்போது வரை 40 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தாண்டு நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் பழங்கால மக்களின் வாழ்விடப்பகுதிகளை கண்டுபிடிப்பதற்காக சிவகளை பகுதியில் உள்ள ஸ்ரீபராக்கிரமபாண்டி திரடு, பொட்டல் திரடு, ஆவாரங்காடு திரடு உள்பட 3 இடங்களில் ஆய்வு பணிகள் நடந்து வருகிறது.
கழிவுநீர் வடிகால் அமைப்பு
இதில் பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் நடந்து வரும் அகழாய்வு பணியில் முதல் முறையாக செங்கலால் அமைக்கப்பட்ட கழிவுநீர் வடிகால் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் கண்டுபிடிக்கப்பட்ட செங்கல்கள் 30 செ.மீ உயரமும், 6 செ.மீ அகலமும் உள்ளது. மேலும் இந்த செங்கல் கட்டுமான அமைப்பு என்பது 2 வரிசையில் அமைந்துள்ளது. இரண்டு வரிசைகளுக்கும் இடையில் 9 செ.மீ இடைவெளி உள்ளதால் இந்த அமைப்பு கழிவுநீர் வடிகால் அமைப்பாக இருக்கக்கூடும் என்!றும், மேலும் இதற்கு கீழே செல்லும் போது இதன் முழு தன்மையும் தெரிய வரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதே குழியில் தோண்டு குழி என்ற அமைப்பில் ஒரு கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கல் என்பது பழங்காலத்தில் 4 கற்களை ஊன்றி அதன்மேல் கூரை அமைத்து பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதன் அருகே ஒரு மண் பானை உள்ளதால் இந்த இடத்தில் ஒரு சிறு தொழில்கூடம் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.