கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கர்ப்பிணி வயிற்றில் உள்ள சிசு சாவு

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கர்ப்பிணியின் வயிற்றில் உள்ள 6 மாத சிசு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-07-10 16:34 GMT
தேனி:
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கர்ப்பிணியின் வயிற்றில் உள்ள 6 மாத சிசு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பூசி
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பத்ரகாளிபுரத்தில் வசிப்பவர் ஜெகன். இவர் டொம்புச்சேரியில் உள்ள ஒரு வாகன பழுதுபார்ப்பு நிலையத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி இருதயரோசி சில்வியா (வயது 23). இவர்கள் 2 பேரும் கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்தனர்.
இந்தநிலையில், இருதயரோசி சில்வியா கர்ப்பமானார். அவர் டொம்புச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பகாலத்தை பதிவு செய்து அங்கு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் ஜெகன் தனது மனைவியை கர்ப்பகால பரிசோதனைக்காக டொம்புச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருந்த மருத்துவ குழுவினர், தற்போது கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருவதால் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பரிந்துரை செய்தனர்.
சிசு சாவு
அதன்படி ஜெகன் தனது மனைவியை தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்ட பின்னர், இருதயரோசி சில்வியா தேனியில் உள்ள ஒரு தனியார் ஸ்கேன் மையத்தில் ஸ்கேன் பரிசோதனை செய்தார். அங்கு பரிசோதனை முடிவை வாங்கிக் கொண்டு டொம்புச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றார்.
அங்கு பரிசோதனை முடிவை பார்த்த டாக்டர், குழந்தைக்கு இதயத்துடிப்பு இல்லை என்றும், குழந்தை எவ்வித அசைவுமற்ற நிலையில் உள்ளதால் உடனடியாக மேல் சிகிச்சைக்கு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறும் அனுப்பி வைத்தார். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவருடைய வயிற்றுக்குள் இருந்த 6 மாத சிசு இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்ட அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
தடுப்பூசிக்கு முன்பே...
இதையடுத்து இருதயரோசி சில்வியாவுக்கு பிரசவ வலி ஏற்படுவதற்காக மருந்து செலுத்தப்பட்டது. இதுகுறித்து மருத்துவ அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "ஸ்கேன் பரிசோதனை முடிவை வைத்து பார்க்கும் போது ஓரிரு நாட்களுக்கு முன்பே வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்து இருப்பதாக தெரியவருகிறது. தடுப்பூசி செலுத்தியதற்கும், சிசுவின் இறப்புக்கும் தொடர்பு இல்லை. அதேநாளில் தடுப்பூசி செலுத்திய மற்ற கர்ப்பிணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தலைப்பிரசவம் என்பதால் அறுவை சிகிச்சை செய்யாமல், சுகப் பிரசவமாக இறந்த சிசுவை வெளியே எடுக்க சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரசவம் முடிந்த பிறகு தான் சிசு இறப்புக்கான உண்மை காரணம் தெரியவரும்" என்றார்.
இந்த சம்பவம் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்