ரேஷன் கடையில் சண்முகையா எம்.எல்.ஏ. ஆய்வு
குறுக்குச்சாலை ரேஷன் கடையில் சண்முகையா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குச்சாலை ரேஷன் கடையில் ஓட்டப்பிடாரம் எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ, தரமான அரிசி, சீனி மற்றும் மண்எண்ணெய் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார். அப்போது ரேஷன் பொருள் இருப்பு குறித்து ரேஷன் கடை விற்பனையாளரிடம் கேட்டறிந்தார். ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு 100 சதவீதம் பொருட்கள் வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும் அனைத்து வேலை நாட்களிலும் ரேஷன் கடை திறந்து இருக்க வேண்டும் என்றார்.
இதனை தொடர்ந்து குறுக்குச்சாலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணிபுரியும் பொதுமக்களிடம் சண்முகையா எம்.எல்.ஏ. குறைகளை கேட்டறிந்தார். அப்போது தற்போது கொரோனோ தாக்கம் கிராமங்களில் உள்ள மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் 18 வயது நிரம்பிய அனைத்து மக்களும் கொரோனோ தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பெருநத்தம் மற்றும் சிந்தலக்கட்டை ஆகிய கிராமங்களில் குடிநீர் பிரச்சினை விரைவில் தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
அப்போது ஓட்டப்பிடாரம் யூனியன் கூடுதல் ஆணையாளர் இப்ராஹிம் சுல்தான், ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், குறுக்குச்சாலை ஊராட்சி செயலாளர் ஜெகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.