திருப்பூரில் இருந்து சேலம் வந்து சொகுசு காரில் ஆடுகளை கடத்திய 3 பேர் கைது-சேற்றில் சிக்கியதால் உரிமையாளரிடம் பிடிபட்டனர்
திருப்பூரில் இருந்து சேலம் வந்து சொகுசு காரில் ஆடுகளை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாழப்பாடி:
திருப்பூரில் இருந்து சேலம் வந்து சொகுசு காரில் ஆடுகளை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆடுகள் திருட்டு
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள திருமனூர் அண்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் எழில் அரசு (வயது 32). தனியார் நிறுவன ஊழியர். இவர் வீட்டில் வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் கனமழை பெய்ததால், ஆடுகளை வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்தார்.
சிறுது நேரம் கழித்து மழை நின்றவுடன் திரும்பி வந்து பார்த்தபோது, அதில் 2 ஆடுகளை காணவில்லை. இதையடுத்து அவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து ஆடுகளை தேடினார். அப்போது சிறிது தூரத்தில் சின்னாண்டிகாடு என்ற இடத்தில் சேற்றில் சிக்கிய நிலையில் சொகுசு கார் ஒன்று நின்றது. இதையடுத்து எழில் அரசு அங்கு சென்று பார்த்தபோது, காரில் தனது 2 ஆடுகளும் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
சொகுசு காரில் கடத்தல்
பின்னர் இதுகுறித்து அவர் வாழப்பாடி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து, காரில் இருந்த 4 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் அவர்கள் திருப்பூர் பகுதியை சேர்ந்த சூர்யா (வயது 19), ராபின் (23) மற்றும் 16 வயதுடைய 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் திருப்பூரில் இருந்து சேலம் வாழப்பாடிக்கு சொகுசு காரில் வந்து ஆடுகளை திருடியதும், கார் சேற்றில் சிக்கியதால் ஆட்டின் உரிமையாளரிடமே பிடிபட்டதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கடத்தப்பட்ட 2 ஆடுகளையும், சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.
சிறுவனுக்கு கொரோனா
பின்னர் அவர்களை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கொரோனா பரிசோதனை செய்தனர். அதில், சிறுவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த சிறுவன் அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.
மற்ற 3 பேரையும் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.