ஆதிவாசி கிராமங்களில் ஆசிரியர்கள் விழிப்புணர்வு
கல்வி தொலைக்காட்சி மூலம் குழந்தைகளை படிக்க வைக்க ஆதிவாசி கிராமங்களில் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கூடலூர்
கல்வி தொலைக்காட்சி மூலம் குழந்தைகளை படிக்க வைக்க ஆதிவாசி கிராமங்களில் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
வீடு, வீடாக சென்று...
கூடலூர் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் ஏராளமான ஆதிவாசி கிராமங்கள் உள்ளது. இங்கு அரசு நிலங்களில் குடியிருக்கும் பொதுமக்கள் மற்றும் வனங்களின் கரையோரம் வாழும் ஆதிவாசி மக்களின் குழந்தைகள் பல்வேறு காரணங்களால் ஆன்லைன் மூலமாக கல்வி கற்பது இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி வழியாக பாடங்களை தினமும் படிக்க வேண்டும் என்று வீடு, வீடாக ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் எந்த நேரங்களில் பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்ற கால அட்டவணையை வழங்கி வருகின்றனர்.
ஆசிரியர்கள் ஆய்வு
முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பெண்ணை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த கிராமத்தில் அடர்ந்த வனத்தில் உள்ளதால், ஆதிவாசி மக்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் சுமார் 22 பேர் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
ஆனால் தினமும் பாடங்களை பயின்று வருகிறார்களா? என்று தலைமை ஆசிரியர் முருகேசன் தலைமையிலான ஆசிரியர்கள் நேற்று ஆய்வு நடத்தினர். அப்போது பெரும்பாலான குழந்தைகள் பாடங்களை படிப்பது இல்லை என்பது தெரியவந்தது.
விழிப்புணர்வு
உடனே பெற்றோரை அழைத்து ஆசிரியர்கள் கூறும்போது, குழந்தைகளுக்கான பாடங்கள் கல தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதை பின்பற்றி தினமும் படிக்க வைக்க வேண்டும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பள்ளிகள் திறக்க காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே வீணாக பொழுதை கழிக்காமல் வீட்டில் இருந்தே பாடங்களை படிக்க குழந்தைகளை அறிவுறுத்த வேண்டும் என்றனர். இதேபோன்று ஓவேலி, தேவாலா, மசினகுடி, தொரப்பள்ளி உள்ளிட்ட ஆதிவாசி கிராமங்களிலும் ஆசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.