ஆனி அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு- சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம்

ஆனி அமாவாசையை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து தரிசனம் செய்தனர்.

Update: 2021-07-09 21:37 GMT
ஈரோடு
ஆனி அமாவாசையை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து தரிசனம் செய்தனர். 
சமூக இடைவெளி
தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. இதனால் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பொதுமக்கள் செல்வதற்கும், தரிசனம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் குறைந்ததன் காரணமாக தமிழக அரசு கூடுதல் தளர்வுகளை அளித்து தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கி உள்ளது.
இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஆனி அமாவாசையை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் நடைகள் திறக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சாமியை தரிசனம் செய்துவிட்டு சென்றனர். 
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தை அடுத்து பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசை, திங்கட்கிழமை, வெள்ளிக்கிழமை, கிருத்திகை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே காணப்படும்.
நேற்று ஆனி அமாவாசையை முன்னிட்டு பக்தர்களின் தரிசனத்துக்காக பண்ணாரி அம்மன் கோவில் நடை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாகவே பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்து நின்றிருந்தார்கள். நடை திறந்ததும் பக்தர்கள் அனைவருக்கும் கோவில் ஊழியர்கள் உடல் வெப்பநிலையை பரிசோதித்தும், கைகளில் கிருமிநாசினி தெளித்தும் கோவிலுக்குள் செல்ல அனுமதித்தார்கள். அங்கு பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அம்மனை தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தார்கள். பின்னர் பக்தர்கள் கோவிலின் குண்டம் பகுதிக்கு சென்று குண்டத்தில் உப்புகளை தூவினார்கள். மேலும் குண்டத்தில் இருந்து சாம்பலை எடுத்து தங்களுடைய நெற்றியில் பூசி கொண்டார்கள். ஆனி அமாவாசை என்பதால் நேற்று பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. 
அந்தியூர்
இதேபோல் அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள மிகவும் பிரசித்தி பெற்றதும் பழமையானதுமான பத்ரகாளியம்மன் கோவிலில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் நடை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. மேலும் அம்மனுக்கு சந்தனக்காப்பு மற்றும் பச்சை பட்டு அணிந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.
அந்தியூர் செல்லீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் குருநாதசாமி கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் ஆனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் அந்தியூர், தவுட்டுப்பாளையம், அத்தாணி, ஆப்பக்கூடல், பர்கூர், வெள்ளித்திருப்பூர், ஒலகடம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் சாமியை தரிசனம் செய்து சென்றார்கள். 
கோபி
கோபி ஈஸ்வரன் கோவில் வீதியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி, சமேத விஸ்வேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நேற்று ஆனி அமாவாசையை முன்னிட்டு விசாலாட்சி, சமேத விஸ்வேஸ்வரர் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னர் சாமிகளுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். 
அதேபோல் கோபி டவுனில் மாதேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில்  மாதேஸ்வரர், மரகதவல்லி சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
சிவகிரி
சிவகிரி அருகே பிரசித்தி பெற்ற பொன்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆனி அமாவாசையையொட்டி அம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மேலும் கொரோனா தொற்று காரணமாக கோவிலுக்குள் தேங்காய், பழத்தை பக்தர்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோவில் முகப்பில் தேங்காய் உடைத்து பக்தர்கள் தீபம் ஏற்றினர். அதேபோல் சிவகிரி அருகே உள்ள வேட்டுவபாளையம் புத்தூர் அம்மன் கோவிலிலும் ஆனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

மேலும் செய்திகள்