தமிழகத்துக்கு சென்று திரும்பிய 35 பேருக்கு கொரோனா
ஹனூர் அருகே தமிழகத்துக்கு சென்று திரும்பிய 35 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கிராமத்துக்கே சீல் வைத்து சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கொள்ளேகால்: ஹனூர் அருகே தமிழகத்துக்கு ெசன்று திரும்பிய 35 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கிராமத்துக்கே சீல் வைத்து சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பரிசோதனை
சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா கவுடஹள்ளி கிராம பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட பகுதியில் எம்.ஜி.தொட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்த 35 பேர் கடந்த வாரம் தமிழ்நாட்டில் நடந்த திருமணத்துக்கு சென்றிருந்தனர். பின்னர் அவர்கள் சாம்ராஜ்நகருக்கு திரும்பி வந்தனர். அப்போது கர்நாடக-தமிழக எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் அவர்களை கர்நாடக போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
இதையடுத்து, சோதனைச்சாவடியில் வைத்து 35 பேருக்கும் சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் எம்.ஜி.தொட்டி கிராமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
35 பேருக்கு கொரோனா
இந்த நிலையில் சோதனைச்சாவடியில் பரிசோதனை செய்யப்பட்ட 35 பேரின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. அதில் தமிழகம் சென்று திரும்பிய 35 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சுகாதாரத்துறையினர், எம்.ஜி.தொட்டி கிராமத்துக்கு சென்று கொரோனா பாதிக்கப்பட்ட 35 பேரையும் மீட்டு சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சுகாதாரத்துறையினர் எம்.ஜி.தொட்டி கிராமம் முழுவதும் கிருமிநாசினி திரவத்தை தெளித்துள்ளனர். மேலும் அந்த கிராத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அந்த கிராமத்தை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாகவும் அறிவித்துள்ளனர். கிராமத்துக்கு செல்லும் சாலைகளும் மூடப்பட்டுள்ளன.