தொழிலாளி கைது
ஊத்துக்குளியில் தம்பி வீட்டில் ரூ.8 லட்சம் மற்றும் 3 பவுன் தங்க நகை திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
ஊத்துக்குளி
ஊத்துக்குளியில் தம்பி வீட்டில் ரூ.8 லட்சம் மற்றும் 3 பவுன் தங்க நகை திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து ஊத்துக்குளி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
ரூ.8 லட்சம் திருட்டு
ஊத்துக்குளி விஜயமங்கலம் ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் வயது 35. இவர் அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவர் ஏலச்சீட்டு எடுத்த பணம் ரூ. 8 லட்சத்தை வீட்டின் பீரோவில் வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சரணவன் வீட்டில் உள்ள பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டுள்ள ரூ.8 லட்சம் இருக்கிறதா என்று பார்த்துள்ளார்.
அப்போது ரூ.8 லட்சத்தையும், அதனுடன் இருந்த 3 பவுன் நகையையும் காணவில்லை. மர்ம ஆசாமி அவற்றை திருடி சென்றது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன் ஊத்துக்குளி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு குமரேசன் தலைமையில் ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், சப்இன்ஸ்பெக்டர்கள் கோமதி, வேலுச்சாமி, முருகேசன் ஆகியோர் ஊத்துக்குளி செங்கப்பள்ளி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
கைது
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் திருப்பூர் வாவிபாளையம் கருணாம்பிகை நகர் பகுதியை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளி சண்முகம் 45 என்றும், சரவணனின் வீட்டில் திருடியவர் மட்டுமல்ல அவருடைய அண்ணன் என்றும் தெரியவந்தது.
தொடர் விசாரணையில் சரவணன் வீட்டிற்கு அவருடைய அண்ணன் அடிக்கடி வருவது வழக்கம்.
அப்போது சீட்டுப்பணம் ரூ. 8 லட்சம் சரவணன் வீட்டில் இருப்பதை தெரிந்து கொண்ட சண்முகம் அங்கு சென்றுள்ளார். பின்னர் தம்பியிடம் சிறிது நேரம் பேசுவதுபோல் பேசிவிட்டு, சரவணன் வீட்டின் பின் பக்கம் சென்றதும், வீட்டின் பீரோவில் இருந்த ரூ.8 லட்சம் மற்றும 3 பவுன்நகையை திருடி சென்றதாக போலீசில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் சண்முகத்தை கைது செய்து அவரிடம் இருந்து ரூ. 8 லட்சம் மற்றும் 3 பவுன்நகை, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை ஊத்துக்குளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.