கே.வி.குப்பம் அருகே காரில் திடீர் தீயால் பரபரப்பு
காரில் திடீர் தீயால் பரபரப்பு
கே.வி.குப்பம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமுகமது. இவர் தன் நண்பரை பார்ப்பதற்காக சகோதரியின் மகள்கள் ஷாரியபர்சின் (வயது 10), அல்சியாபர்சின் (8) ஆகியோருடன் காரில் காட்பாடி ரோடு வழியாக கே.வி.குப்பம் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
ஆலமரம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது திடீரென கார் தீப்பற்றியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜாமுகமது, காரை நிறுத்தி விட்டு 2 சிறுமிகளுடன் கீழே இறங்கித் தப்பித்தார்.
தீ மளமளவெனப் பற்றியதில் கார் முழுவதும் பயங்கரமாக எரிந்தது. உடனே அங்கிருந்த பொக்லைன் எந்திரம் மூலம் தீயை அணைக்க மண்ணை வாரி காரின் மீது கொட்டினர். அதற்குள் விரைந்து வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் வந்து அணைத்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடு ரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.