சின்னசேலத்தில் ரூ 1 கோடி கடனை திருப்பி கேட்ட வியாபாரிக்கு கொலை மிரட்டல்
சின்னசேலத்தில் ரூ 1 கோடி கடனை திருப்பி கேட்ட வியாபாரிக்கு கொலை மிரட்டல் ஆயில்மில் உரிமையாளர் உள்பட 5 பேர் மீது வழக்கு
சின்னசேலம்
தஞ்சாவூர் மாவட்டம் மருதகுடி நெல்லப்பன்பேட்டையைச் சேர்ந்தவர் பழனிசெல்வம்(வயது 61). நவதானிய வியாபாரியான இவர் கடந்த 6 ஆண்டுகளாக பக்கத்து ஊர்களில் மணிலாவை வாங்கிவந்து சின்னசேலத்தில் ஆயில் மில் நடத்திவரும் நைனார்பாளையத்தை சேர்ந்த பெரியசாமியிடம் கொடுத்து வந்தார். இந்த வகையில் பழனிசெல்வத்துக்கு ரூ.1 கோடியே 5 லட்சம் பாக்கியை பெரியசாமி தரவேண்டி இருந்தது. இதில் கடந்த மார்ச் மாதம் ரூ.70 லட்சம் கடனை காசோலையாக பழனிசெல்வத்திடம் பெரியசாமி கொடுத்தார். ஆனால் அவரது வங்கி கணக்கில் பணம் இல்லை என காசோலை திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சின்னசேலத்தில் உள்ள ஆயில் மில்லுக்கு வந்த பழனிசெல்வம் பெரியசாமியிடம் தனக்கு தர வேண்டிய கடனை கேட்டுள்ளார். அப்போது பெரியசாமி அவரது மனைவி தங்கம், மகன் பாலுசாமி மற்றும் அடையாளம் தெரியாத 2 பேர் ஒன்றுகூடி ஆயுதங்களை காட்டி பழனிசெல்வத்தை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் பெரியசாமி உள்பட 5 பேர் மீதும் சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.