மயானம் கேட்டு வாலிபர் உடலுடன் பொதுமக்கள் மறியல் போராட்டம்

விராலிமலை அருகே மாயானம் கேட்டு வாலிபர் உடலுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-09 17:00 GMT
விராலிமலை, ஜூலை.10-
விராலிமலை அருகே மாயானம் கேட்டு வாலிபர் உடலுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தூக்கில் தொங்கினார்
விராலிமலை தாலுகா கல்குடியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் மணிகண்டன் (வயது 21). இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வந்தனர்.
சாலை மறியல்
அதனைத்தொடர்ந்து நேற்று பிரேத பரிசோதனைக்கு பிறகு போலீசார் மணிகண்டனின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையில் கல்குடி மயானத்தில் மணிகண்டனின் உடலை  அடக்கம் செய்யக்கூடாது என தனிநபர் சொல்லியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கல்குடி பொதுமக்கள் மருத்துவமனையிலிருந்து மணிகண்டனின் உடலை வீட்டிற்கு ஆம்புலன்சில் எடுத்து செல்லும் வழியில் விராலிமலை காமராஜர் நகர் பகுதியில் உள்ள இனாம்குளத்தூர் பிரிவு சாலையில் நிறுத்தி  மறியலில் ஈடுபட்டனர். மணிகண்டனின் உடலை அடக்கம் செய்ய மயானம் வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் சாலையில் அமர்ந்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த விராலிமலை தாசில்தார் சதீஸ் சரவணகுமார் மற்றும் இலுப்பூர்  துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மொழி அரசு ஆகியோர் மணிகண்டனின் உறவினர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வருவாய் கோட்டாட்சியர் வரவேண்டும் என கூறி பொதுமக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாததால்  பொதுமக்கள் சாலைமறியலை தொடர்ந்தனர்.
இதனையடுத்து போலீசார் பொதுமக்களை விலக்கி ஆம்புலன்சை எடுத்து சென்றனர். ஆம்புலன்சை பின்தொடர்ந்து சென்ற பொதுமக்கள் மேப்பூதகுடி பிரிவு சாலை அருகே சாலையில் கற்களை வைத்து ஆம்புலன்சை மறித்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. மீண்டும் அங்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.
3 மணி நேரம்  பாதிப்பு
இதனை தொடர்ந்து உறவினர்கள் மணிகண்டனின் உடலை ஆம்புலன்சில் இறுதிசடங்கு செய்வதற்காக கல்குடிக்கு எடுத்துச் சென்றனர்.இந்த சம்பவத்தால் சுமார் 3மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்