பொம்மிடி அருகே குடும்ப தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
பொம்மிடி அருகே குடும்ப தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
பொம்மிடி:
பொம்மிடி அருகே உள்ள விடிவெள்ளி நகர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் அசோக்குமார் (வயது 35). இவர் சொந்தமாக கார் வாங்கி வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி மவுனிகா (28). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு சபரி (8) என்ற மகன் உள்ளான். இதனிடையே கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மவுனிகா கணவரிடம் கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு அடிக்கடி சென்றுவிடுவார். அசோக்குமார் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் சென்று சமாதானம் பேசி மனைவியை அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு காரணமாக மவுனிகா கொடுத்த புகாரின் பேரில் கணவன்-மனைவியை பொம்மிடி போலீசார் அழைத்து சமரசம் செய்து அனுப்பியுள்ளனர். வீட்டுக்கு வந்த மவுனிகா நேற்று முன்தினம் இரவு மின் விசிறியில் தூக்குப்போட்டு கொண்டார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பொம்மிடி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது மவுனிகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொம்மிடி போலீசார், மவுனிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தா்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.