திண்டுக்கல் மாவட்டத்தில் போக்சோ சட்டத்தில் 4 வாலிபர்கள் கைது

திண்டுக்கல் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் போக்சோ சட்டத்தில் 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-07-09 16:00 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ (வயது 21). சுமை தூக்கும் தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் பிரிட்டோவிடம் இருந்து சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.  அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரிட்டோவை கைது செய்தனர்.
திண்டுக்கல் அருகே உள்ள பாலம்ராஜக்காபட்டியை சேர்ந்தவர் பூபதி (21). வேன் டிரைவர். இவர் 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடந்த மாதம் 22-ந்தேதி கடத்தி சென்று விட்டார். இது குறித்த புகாரின்பேரில் வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது சிறுமி இன்னும் திருமண வயதை எட்டவில்லை என்று தெரிந்தது. இதைடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபதியை கைது செய்தனர்.
இதுபோல பெரும்பாறை அருகே உள்ள நல்லூர்காட்டை சேர்ந்தவர் ஜெயபாண்டி (19). இவர் 14 வயது சிறுமியிடம், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பழகி வந்தார். இதையடுத்து கர்ப்பமான சிறுமி பிரசவத்துக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தாண்டிக்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயபாண்டியை கைது செய்தனர்.
நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டியை சேர்ந்தவர் விஷ்வா (19). இவர் வேடசந்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது பிளஸ்-1 மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதுடன், திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ேவடசந்தூர் போலீசார் விஷ்வாவையும், அந்த மாணவியையும் பிடித்து, வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து விஷ்வா மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர். மேலும் மீட்கப்பட்ட மாணவி, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்