பொள்ளாச்சி
திண்டுக்கல் மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 26). இவரது பெரியப்பா மகன் உறவு முறையில் அண்ணன் மனைவி சிவகாமி (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சிவகாமி மற்றும் அவரது 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு பொன்னுச்சாமி பொள்ளாச்சி அருகே உள்ள செல்லாண்டிகவுண்டன்புதூருக்கு வந்தார்.
அங்கு ஒரு தோட்டத்தில் பொன்னுச்சாமி வேலை பார்த்து கொண்டு, அதே பகுதியில் குடியிருந்து வந்தார். இந்த நிலையில் அவர் அடிக்கடி யூடியூப்பில் மாந்ரீகம், ஜோசியம் ஆகியவற்றை பார்த்து மனநிலை பாதித்து இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிவகாமி குழந்தைகளுடன் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று பொன்னுச்சாமி அவரது உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு தோட்டத்துக்காரர் மற்றும் அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர்.
பின்னர் பொன்னுச்சாமியின் உடலில் பிடித்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் பொன்னுச்சாமி தீயில் கருகி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடக்கிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து அவரது உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.