தினசரி 200 பேருக்கு சளி மாதிரி சேகரிப்பு
தினசரி 200 பேருக்கு சளி மாதிரி சேகரிப்பு
பொள்ளாச்சி
கொரோனா 2-வது அலையின் பாதிப்பு கடந்த மே மாதம் உச்சத்தில் இருந்தது. மேலும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
இந்த நிலையில் கடந்த மாதம் முதல் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் தற்போது தினமும் 2 பேருக்கு தான் தொற்று உறுதி செய்யப்படுகிறது.
பாதிப்பு குறைந்ததாலும் நகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் நகரில் கொரோனா பரிசோதனை செய்வதற்கு 2 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த குழுவினர் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்கின்றனர்.
அப்போது கையுறை அணியாமல் சளி மாதிரிகளை சேகரிப்பதால் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக கடந்த 7-ந்தேதி 'தினத்தந்தி'யில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.இதற்கு நகராட்சி கமிஷனர் காந்திராஜ் உடனடியாக நடவடிக்கை எடுத்தார்.
சுகாதார பிரிவுகளை அதிகாரிகளிடம் அவர் பரிசோதனையின் போது கண்டிப்பாக கையுறை, முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து தற்போது கையுறை அணிந்து பொதுமக்களிடம் சளி மாதிரிகள் சேகரித்து வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
காமாட்சி நகர், வடுகபாளையம் ஆகிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் கொரோனா பரிசோதனைக்கு 2 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவினர் மார்க்கெட், சந்தை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தொற்று அறிகுறி மற்றும் அறிகுறி இல்லாத விருப்பமுள்ள நபர்களிடம் இருந்து சளி மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்புவார்கள்.
தினமும் 200 பரிசோதனைகள் செய்யப்படுகின்றது. சளி மாதிரிகள் எடுப்பதற்கு கையுறை வழங்கப்பட்டு உள்ளது. எனவே முகக்கவசம், கையுறை அணிந்து தான் சளி மாதிரிகள் சேகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.