திண்டுக்கல்லில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஏராளமானோர் வழிபாடு
திண்டுக்கல்லில் ஆனி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஏராளமானோர் வழிபாடு நடத்தினர்.
முருகபவனம்:
ஆனி அமாவாசை வெள்ளிக்கிழமையான நேற்று திருவாதிரை நட்சத்திரம் சேர்ந்த சிறப்பு நாளாக அமைந்தது. இந்நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் 12 ஆண்டுகள் தர்ப்பணம் கொடுத்த புண்ணியம் கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. பித்ரு தோஷம் நீங்கும் என்று இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. இத்தகைய சிறப்புமிக்க நாளான நேற்று ஏராளமானோர் தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
இதையொட்டி திண்டுக்கல் கோபால சமுத்திர கரையில் தர்ப்பண வழிபாடுகள் நடைபெற்றன. இதற்காக நேற்று அதிகாலையிலேயே ஏராளமானோர் தர்ப்பணம் கொடுக்க அங்கு வந்தனர். அவ்வாறு வந்தவர்கள் அனைவரும் வரிசையாக அமர வைக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து அவர்கள், வாழைஇலை விரித்து அதில் அரிசி, காய்கறிகள், பூ, பழம் வைத்து புரோகிதர்கள் மந்திரங்கள் கூற முன்னோர்களை நினைத்து எள், தண்ணீர் விட்டு தர்ப்பணம் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து சூடம் ஏற்றி வழிபட்டனர்.
பின்னர் தர்ப்பணம் கொடுத்த அரிசியில் சிறிதளவு வீட்டிற்கு எடுத்துச்சென்று சமையலில் சேர்த்து விரதம் விட்டனர். மேலும் பலர் அன்னதானம் செய்து, பசு மாடுகளுக்கு அகத்திக்கீரையை வாங்கி, உண்ண கொடுத்து விரதத்தை நிறைவு செய்தனர்.