குன்னத்தூர் கமண்டல நாகநதியில் திடீர் வெள்ளப்பெருக்கு
குன்னத்தூர் கமண்டல நாகநதியில் பலத்த மழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் குடியிருப்புவாசிகள் கடுமையாக அவதிப்பட்டனர்.
ஆரணி,
ஆரணி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் நேற்று முன்தினம் இரவில் இருந்து அதிகாலை வரை தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதேபோல் படவேடு, அமிர்தி சுற்று வட்டாரப் பகுதியில் கனமழை பெய்தது. ஜவ்வாதுமலை பகுதியில் பெய்த பலத்த மழையால் அங்கிருந்து வரும் கமண்டல நாகநதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
ஆரணிைய அடுத்த குன்னத்தூர், கொண்டம் பகுதியில் கமண்டல நாகநதியில் ஓடும் தண்ணீர் வீணாவதை தடுக்க குன்னத்தூர், அக்ராப்பாளையம், சேவூர், ராட்டினமங்கலம் கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும், விவசாயிகள் திரண்டு வந்து மணல் மூட்டைகளை அடுக்கி குன்னத்தூர், கொண்டம் பகுதியில் உள்ள ஏரிக்கு தண்ணீரை திருப்பி விட்டனர். அப்போது தண்ணீரில் மலர் தூவப்பட்டது.
மேலும் ஆரணியில் உள்ள சூரியகுளத்திலும் அதிகளவில் நீர் தேங்கி இருந்தது. ஆரணி கோட்டை மைதானத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியிருந்தது. ஆரணி ஒருங்கிணைந்த வி.ஏ.கே. நகர் பகுதியான தேனருவி நகர், பாஸ்கர் நகர், ஜெயலட்சுமி நகர் ஆகிய குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
ஆரணியை அடுத்த காமக்கூர், கைகிளாந்தாங்கல், களம்பூர், சதுப்பேரி ஆகிய சுற்று வட்டாரக் கிராம பகுதிகளில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர். அவை அறுவடைக்கு தயாராக இருந்தன.
இந்த நிலையில் அந்த வயல்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் நெற்பயிர்கள் நாசமாயின. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.