திருவாரூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
திருவாரூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிகலாம் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர்,
வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் 2006-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து முறையாக பதிவை புதுப்பித்திருக்க வேண்டும். 2016-ம் ஆண்டு ஜூன் 30-ந் தேதி அன்று அல்லது அதற்கும் முன்பாக பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பள்ளி இறுதி வகுப்பு தவறியவர்களுக்கு மாதம் ரூ.200, பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300, மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.600 என வழங்கப்பட்டு வருகிறது.
ஆதிராவிடர்கள் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவராயின் 45 வயதிற்குள்ளும், இதர வகுப்பினராயின் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தவர்களுக்கு மாதம் ரூ.600, மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகையாக 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
பதிவுசெய்து கடந்த மாதம் (ஜூன்) 30-ந் தேதி அன்று ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். இவர்களுக்கு வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை.
உதவித்தொகை பெறும் காலத்தில் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் முழு நேர மாணவராக இருத்தல் கூடாது. தொலைதூரக்கல்வி பயில்பவராக இருக்கலாம். அரசுத்துறை அல்லது தனியார் துறையில் ஊதியம் பெறும் பதவியிலோ அல்லது சுயவேலைவாய்ப்பிலோ ஈடுபடுபவராக இருக்கக்கூடாது. முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும். அல்லது
தகுதி உடையவர்கள் இதற்கான விண்ணப்ப படிவத்தை www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். விண்ணப்பப்படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகலுடன் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 31-ந் தேதிக்குள் ஆர்.வி.எல். நகர், மன்னார்குடி ரோடு, விளமல் திருவாரூர் என்ற முகவரியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அளிக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளுக்கும், மற்றவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. உதவித்தொகை தொடங்கிய காலத்திலிருந்து பயனாளிகள் ஒவ்வொரு ஆண்டிலும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சுய உறுதிமொழி ஆவணம் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். அவ்வாறு சுய உறுதிமொழி ஆவணம் அளிக்க தவறியவர்கள் அதை உடனடியாக நேரில் வந்து அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.