தார்வார் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் யோகேஷ் கவுடா கொலையில் அரசு ஊழியர் கைது
தார்வார் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில் அரசு ஊழியரை, சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து உள்ளனர்.
பெங்களூரு: தார்வார் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில் அரசு ஊழியரை, சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து உள்ளனர்.
யோகேஷ் கவுடா கொலை
தார்வார் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக பணியாற்றியவர் யோகேஷ் கவுடா. பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந் தேதி காலை 6 மணிக்கு தார்வார் அருகே தான் நடத்தி வரும் உடற்பயிற்சி மையத்தில் இருந்தார். அப்போது அந்த உடற்பயிற்சி மையத்தில் புகுந்த மர்மநபர்கள், யோகேஷ் கவுடாவை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் தார்வார் மட்டுமின்றி கர்நாடகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை சம்பவம் குறித்து தார்வார் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த கொலை முந்தைய சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் போது நடந்து இருந்தது.
சித்தராமையாவின் மந்திரிசபையில் மந்திரியாக பணியாற்றிய வினய் குல்கர்னிக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. யோகேஷ் கவுடா கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று பா.ஜனதாவினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற சித்தராமையா மறுத்து இருந்தார்.
சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைப்பு
இந்த நிலையில் கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பா.ஜனதா அரசு அமைந்ததும் யோகேஷ் கவுடா கொலை வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டு இருந்தது. இதையடுத்து யோகேஷ் கவுடா கொலை வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள் யோகேஷ் கவுடா கொலையில் முன்னாள் மந்திரி வினய் குல்கர்னி, அவரது உறவினர் சிவப்பா முடகி, சந்திரசேகர் இண்டி உள்பட 8 பேரை கைது செய்து உள்ளனர்.
இவர்களில் வினய் குல்கர்னி பெலகாவி இண்டல்கா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் யோகேஷ் கவுடா கொலையில் அரசு ஊழியரான சோமு நியாமகவுடா என்பவருக்கு தொடர்பு இருப்பதாக, சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதாவது வினய் குல்கர்னி மந்திரியாக இருந்த போது சோமு நியாமகவுடா அவரது செயலாளராக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் யோகேஷ் கவுடா கொலைக்கு சோமு நியாமகவுடா உதவியது சி.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது.
அரசு ஊழியர் கைது
தற்போது சோமு நியாமகவுடா கதக்கில் ஏ.பி.எம்.சி. மார்க்கெட் செயலாளராக பணியாற்றி வந்தார். நேற்று காலை கதக் சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் சோமு நியாமகவுடாவை கைது செய்தனர். பின்னர் அவரை தார்வார் புறநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கில் அரசு ஊழியர் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.