கறம்பக்குடி பகுதியில் முருங்கைக்காய் விளைச்சல் அமோகம்
கறம்பக்குடி பகுதியில் முருங்கைக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது. ஆனால், விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கறம்பக்குடி
முருங்கை சாகுபடி
கறம்பக்குடி தாலுகா பகுதியில் நெல், கரும்பு, வாழை போன்றவை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்ட போதிலும் கத்தரி, வெண்டைக்காய், மரவள்ளி கிழங்கு, முருங்கை போன்ற தோட்ட பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக கறம்பக்குடி அருகே உள்ள சிவவிடுதி, ராங்கியன் விடுதி, குளந்திரான்பட்டு ஆகிய பகுதிகளில் கொடி முருங்கை செடிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
விளைச்சல் அமோகம்
தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓரளவு மழை பெய்து வருவதால் செடிகளில் முருங்கை காய்கள் நல்ல விளைச்சல் கண்டு நீண்டு வளர்ந்து கொத்து, கொத்தாக காய்த்து தொங்குகின்றன. இப்பகுதியில் விளைவிக்கப்படும் முருங்கை காய்கள் ருசியாக இருப்பதால் உள்ளூர் மட்டுமின்ற வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் கறம்பக்குடி பகுதிக்கு வந்து முருங்கை காய்களை வாங்கி செல்கின்றனர்.
தற்போது அறுவடை பணி நடைபெற்று வருவதால் தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகை மாவட்ட பகுதிகளுக்கு முருங்கை காய்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. முருங்கை காய்கள் நல்ல விளைச்சல் கண்டுள்ள போதிலும் விலை குறைந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
விலை குறைவு
இதுகுறித்து முருங்கைகாய் சாகுபடி செய்துள்ள விவசாயி பகவான் சுரேஷ் கூறுகையில், முருங்கையின் இலை, பூ, காய் என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை என்பதாலும், இரும்பு சத்து நிறைந்தது என்பதாலும் பொதுமக்களால் விரும்பி வாங்கப்படுகிறது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்ட முருங்கை காய்கள் தற்போது ரூ.13 முதல் ரூ.15 வரை மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் உழைப்புக்கு உரிய பலன் கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டமடையும் நிலை ஏற்பட்டு உள்ளது.
கொடி முருங்கை மட்டுமல்லாமல் நாட்டு முருங்கை மரங்களையும் இப் பகுதியில் தோப்பாக வளர்த்து வருகிறோம். கடைகளில் ஒரு முருங்கைகாய் ரூ.5-க்கு அதிகமாக விற்கப்படுகிறது. ஆனால், எங்களிடம் மிக குறைவான விலைக்கே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், என்னை போன்று முருங்கை சாகுபடியில் ஈடுபட்டுள்ள பல விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். ஆகவே, முருங்கை விவசாயிகளின் நலன்காக்க தோட்டக்கலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.