தடுப்பூசி போடுவதற்காக சமூக இடைவெளி இன்றி திரண்ட மக்கள்

தஞ்சை குழந்தைகள் நல இல்லத்தில் தடுப்பூசி போடுவதற்காக மக்கள் குவிந்தனர். அவர்கள் சமூக இடைவெளியின்றி திரண்டதால் கொரோனா பரவுமோ? என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டது.

Update: 2021-07-08 19:46 GMT
தஞ்சாவூர்:
தஞ்சை குழந்தைகள் நல இல்லத்தில் தடுப்பூசி போடுவதற்காக மக்கள் குவிந்தனர். அவர்கள் சமூக இடைவெளியின்றி திரண்டதால்  கொரோனா பரவுமோ? என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டது.
கொரோனா 2-வது அலை
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசிகளும் போடப்படுகிறது. 
தமிழகத்தில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. தற்போது தமிழகத்தில் தடுப்பூசிகள் தட்டுப்பாடு காரணமாக குறைந்த எண்ணிக்கையிலேயே போடப்பட்டு வருகின்றன.
2 இடங்களில் தடுப்பூசி
தஞ்சை மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு மையங்களில் இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. தஞ்சை மாநகரில் நேற்று 2 இடங்களில் மட்டும் தடுப்பூசிகள் போடப்பட்டன. தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு மண்டபத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி அனைவருக்கும் போடப்பட்டது. இதற்காக அதிகாலை முதலே டோக்கன் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் தடுப்பூசிகள் போடப்பட்டன.
தஞ்சை மேம்பாலம் அருகே உள்ள ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் கோவேக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டன. இங்கு நேற்று முதல் தவணை தடுப்பூசி போட்ட பொதுமக்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசிகள் போடப்பட்டன. இதற்காக நேற்று பொதுமக்கள் 500 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. 4 நாட்களுக்கு பிறகு தடுப்பூசி போடப்பட்டதால் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு வந்தனர்.
சமூக இடைவெளி இல்லை
டோக்கன் தீர்ந்த பின்னர் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்காக அங்கு திரண்டு வந்தனர். அவர்களிடம் அங்கிருந்த ஊழியர்கள் டோக்கன் தீர்ந்துவிட்டது என கூறினர். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் அங்கு பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கிருந்த ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் இரண்டாவது தவணை தடுப்பூசி போடுவதற்காக வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி நீண்ட வரிசையில் நின்றனர். இதனால் கொரோனா தொற்று ஏற்படுமோ? என்ற அச்சமும் பொது மக்களிடையே நிலவியது.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி போடப்படும் நிலையில் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் வற்புறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தஞ்சையில் தடுப்பூசி போடும் மையத்தின் அருகே பொதுமக்கள் சமூக இடைவெளி இன்றி கூட்டமாக திரண்டதால் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்