திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் நேற்று பகலில் வழக்கம் போல் கடுமையான வெயில் கொளுத்தியது. மதிய வேளையில் வெளியே நடமாடிய மக்கள் வியர்வையில் குளித்தபடி சென்றனர். இதற்கிடையே மாலை 4 மணிக்கு வானில் கருமேக கூட்டங்கள் திரண்டன. இதையடுத்து மாலை 4.50 மணிக்கு சாரல் மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் சிறிது நேரத்தில் அது பலத்த மழையாக மாறியது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது. இதற்கிடையே மழையின் நடுவே அவ்வப்போது பலத்த காற்று வீசியது. இதைத் தொடர்ந்து வானில் மேககூட்டங்கள் குறைந்து சூரியனுக்கு வழிவிட்டன. இதனால் மழை துளிகளுக்கு இடையே மாலைநேர மஞ்சள் வெயில் ஊடுருவியது. பின்னர் மழையும், வெயிலும் சேர்ந்து வெளுத்து வாங்கியது. அதன்மூலம் வானவில் தோன்றியது.
மழை, வெயில், வானவில் என மூன்றும் சேர்ந்து காண்போரின் கண்களை கவர்ந்தது. இது திண்டுக்கல் மக்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்தது. மேலும் மதியம் வியர்வையில் குளித்தவர்கள், மாலையில் மழையில் நனைந்து மகிழ்ந்தனர். மேலும் ஒரு மணிநேரம் கொட்டி தீர்த்த மழையால் நாகல்நகர் பழைய ஆர்.எம்.எஸ்.சாலை, ஆர்.எஸ்.சாலை, ரவுண்டுரோடு, திருச்சி சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
வத்தலக்குண்டுவில் நேற்றுமாலை 6 மணி அளவில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் இடை விடாமல் மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனிடையே மழை காரணமாக இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை மின்தடை ஏற்பட்டது.