காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது
ராமேசுவரம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமை தாங்கினார். நகர் தலைவர் கோபி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட பொதுச் செயலாளர் மணிகண்டன், மாவட்ட சேவாதள தலைவர் காருகுடி சேகர், வழக்கறிஞர் பிரிவு தலைவர் அன்புச்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினர் கையில் விறகுகள் மற்றும் மண்எண்ணெய் அடுப்பு முதலியவற்றை ஏந்தியவாறு மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
இதேபோல திருப்புல்லாணி வட்டார காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து வட்டார காங்கிரஸ் தலைவர் சேது பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் பாம்பன், திருவாடானை உள்ளிட்ட பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராேமசுவரம்
ராமேசுவரத்தில் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்க் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பாரிராஜன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர்தலைவர் ராஜாமணி, மாவட்ட துணைத் தலைவர் காமராஜ், நகர் செயலாளர் அப்துல் ஜப்பார் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
கடலாடி மற்றும் சாயல்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலாடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் சேர்மன் வேல்சாமி தலைமை தாங்கினார். கடலாடி வட்டார தலைவர் கிழக்கு தனசேகரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. சாயல்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர் தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் வேல்சாமி, மாவட்ட செயலாளர்கள் ஜெயராஜ், முனியசாமி, போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.