ரேஷன் கடை விற்பனையாளரை சிறைவைத்து கிராம மக்கள் போராட்டம்
விழுப்புரம் அருகே பொருட்கள் சரியாக வழங்காததால் ரேஷன் கடை விற்பனையாளரை சிறைவைத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே வளவனூரில் உள்ள ரேஷன் கடையில் கடந்த சில நாட்களாக பொதுமக்களுக்கு சரிவர அத்தியாவசிய பொருட்களை வழங்கவில்லை என புகார் எழுந்தது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று காலை அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்காக அந்த கடைக்கு பொதுமக்கள் சென்றனர். ஆனால் நேற்றும் அத்தியாவசிய பொருட்களை கடையின் விற்பனையாளர் சரிவர வழங்கவில்லை என தெரிகிறது. இதுபற்றி கேட்ட கிராம மக்களை அந்த விற்பனையாளர் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
சிறைவைத்து போராட்டம்
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், அந்த விற்பனையாளரை கடைக்குள் வைத்து சிறை வைத்தனர். பின்னர், அதன் கதவுகளை இழுத்து மூடி பூட்டுப்போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் வளவனூர் வருவாய் ஆய்வாளர் நர்மதா, கிராம நிர்வாக அலுவலர் ராஜா ஆகியோர் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயர் அதிகாரிகளிடம் பேசி, அத்தியாவசிய பொருட்களை தடையின்றி வழங்க நடவடிக்கை எடுப்பதாக வருவாய்த்துறையினர் உறுதியளித்தனர். அதனை ஏற்ற பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு ரேஷன் கடையின் கதவு திறக்கப்பட்டு விற்பனையாளர் விடுவிக்கப்பட்டார். இந்த திடீர் போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.