கொரோனா தடுப்பூசி செலுத்த அலைமோதிய கூட்டம்
தேனியில் கோவேக்சின் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்த மக்கள் அலைமோதினர். சமூக இடைவெளியை கைவிட்டு தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.
தேனி:
கோவேக்சின் தட்டுப்பாடு
மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்து வருகிறது. தமிழகத்துக்கு கூடுதல் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம், தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை இருந்து வருகிறது. மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் தடுப்பூசி துரிதமாக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதனால், கையிருப்பு தடுப்பூசி துரிதமாக தீர்ந்து போகிறது.
கோவிஷீல்டை விடவும், கோவேக்சின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. தேனி மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று வரை மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 601 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், 2 லட்சத்து 11 ஆயிரத்து 155 டோஸ் கோவிஷீல்டு, 29 ஆயிரத்து 446 டோஸ் கோவேக்சின் செலுத்தப்பட்டு உள்ளது.
அதுபோல், மாவட்டத்தில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 952 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. 27 ஆயிரத்து 649 பேருக்கு மட்டுமே 2 தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது.
மக்கள் கூட்டம்
முதல் தவணையாக கோவேக்சின் தடுப்பூசி செலுத்தியவர்கள் 28 நாட்களுக்கு பிறகு 2-வது தவணையும், கோவிஷீல்டு செலுத்தியவர்கள் 84 நாட்களுக்கு பிறகு 2-வது தவணையும் செலுத்த வேண்டும். ஆனால், கோவேக்சின் மருந்து தட்டுப்பாடு எதிரொலியாக மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திய மக்கள் 28 நாட்கள் கடந்த பின்னும் 2-வது தவணை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. இதனால், தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்கு தினமும் மக்கள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்நிலையில், மாவட்டத்தில் 6 இடங்களில் நேற்று கோவேக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது. மொத்தம் 950 டோஸ் தடுப்பூசி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இதனால், தடுப்பூசி செலுத்தும் மையங்களில் அதிகாலையிலேயே மக்கள் குவியத் தொடங்கினர்.
தள்ளுமுள்ளு
தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மையத்துக்கு அதிகாலை 5.30 மணிக்கே மக்கள் வந்து காத்திருந்தனர்.
காலை 8 மணியளவில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், அந்த மையத்தின் நுழைவு வாயில் திறக்கப்பட்டு சுமார் 150 பேர் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அதற்கு மேல் இட வசதி இல்லாததால் மற்றவர்கள் நுழைவு வாயிலுக்கு வெளியே காத்திருந்தனர்.
நீண்ட நேரம் காத்திருந்த மக்கள் உள்ளே செல்வதற்கு முண்டியடித்தனர். சமூக இடைவெளியை கைவிட்டு தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு வந்தனர்.
கூட்டமாக குவிந்து நின்ற மக்களை வரிசையில் நிற்குமாறு அறிவுறுத்தினர். இருப்பினும் 200 பேருக்கு மட்டுமே அங்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதால் ஏராளமான மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.