கோவிலில் நகைகள் திருடிய வழக்கில் சிறுவன் உள்பட 4 பேர் கைது

பெரியகுளம் அருகே கோவிலில் நகைகள் திருடிய வழக்கில் சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டது.

Update: 2021-07-08 17:18 GMT
பெரியகுளம்: 

கோவிலில் நகைகள் திருட்டு 
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தில் அழகுமலையான் கோவில் உள்ளது. கடந்த 6-ந் தேதி இரவு இந்த கோவில் கதவின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். கோவிலில் இருந்த 4¼ பவுன் நகைகள், 2¾ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ஒலிப்பெருக்கி உபகரணங்கள் ஆகியவற்றை திருடி சென்றனர். 

இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில், பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார் மேற்பார்வையில் தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமாறன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 

4 பேர் கைது 
இந்த தனிப்படை போலீசார் ஏற்கனவே திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதில் சிலரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணையில் கோவில் நகைகள் மற்றும் பொருட்களை திருடியது தாமரைக்குளம் தாசில்தார் நகரை சேர்ந்த பிரதாப் சிங் (வயது 20), அழகர்சாமி புரத்தைச் சேர்ந்த புவனேஸ்வரன் (22), ஜெகதீஸ்வரன் (23) மற்றும் 18 வயது சிறுவன் உள்பட 4 பேர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் நேற்று கைது செய்தனர். 

அவர்களிடம் இருந்து கோவிலில் திருடிய 4¼ பவுன் நகை, 2¾ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ஒலிப்பெருக்கி உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் மீட்டனர். அதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். 

இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரைந்து கண்டுபிடித்த தனிப்படை போலீசாரை, தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.

மேலும் செய்திகள்