தேனி அரசு டாக்டர்கள், நர்சுகளிடம் இறுதி கட்ட விசாரணை
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உயிருடன் இருந்த குழந்தை இறந்ததாக கூறிய விவகாரம் குறித்து டாக்டர்கள், நர்சுகளிடம் இறுதி கட்ட விசாரணை நேற்று நடந்தது.
ஆண்டிப்பட்டி:
உயிர்த்தெழுந்த குழந்தை
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைகுளம் தாசில்தார் நகரை சேர்ந்தவர் பிலவேந்திர ராஜா. இவருடைய மனைவி பாத்திமா மேரிக்கு கடந்த 3-ந்தேதி பிரசவ வலி ஏற்பட்டு, சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை உடல் அசைவின்றி இருந்தது. இதை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்ததாக கூறி உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் அந்த குழந்தையின் உடலை கல்லறையில் அடக்கம் செய்ய முயன்றபோது, கை, கால்கள் அசைந்தன. இறந்ததாக கூறப்பட்ட குழந்தை உயிர்த்தெழுந்ததை பார்த்த உறவினர்கள் அதை மீண்டும் தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 5-ந்தேதி குழந்தை இறந்தது.
10 பேருக்கு நோட்டீஸ்
உயிருடன் இருந்த குழந்தையை இறந்ததாக கூறிய டாக்டர்கள், நர்சுகள் அலட்சியம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து மாவட்ட கலெக்டர் முரளிதரன் உத்தரவின்பேரில், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் தலைமையில் 3 பேராசிரியர்கள் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது.
மேலும் குழந்தை பிறந்தபோது வார்டில் பணிபுரிந்த 2 டாக்டர்கள், 5 நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் உள்பட 10 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இறுதி விசாரணை
விசாரணை குழுவினர் முதற்கட்ட மற்றும் 2-ம் கட்ட விசாரணை நடத்தினர். அதில் சம்பவம் நடந்தபோது பணியில் இருந்தவர்கள், குழந்தையின் பெற்றோர், உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அந்த விசாரணை அறிக்கை தேனி மாவட்ட கலெக்டருக்கும், மருத்துவக்கல்வி இயக்குனரகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரசு டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பணியாளர்களிடம் மீண்டும் இறுதி கட்ட விசாரணை நேற்று நடந்தது. இந்த விசாரணை முடிந்த பின்பு, அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.