வேதாரண்யம் அருகே, கடற்கரையில் ஆண் பிணம் - இலங்கையை சேர்ந்தவரா? என போலீசார் விசாரணை
வேதாரண்யம் அருகே கடற்கரையில் ஆண் பிணம் கரை ஒதுங்கியது. அவர் இலங்கையை சேர்ந்தவரா? என்பது பற்றி கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தினர்.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை புதிய கலங்கரை விளக்கம் பகுதியில் உள்ள கடற்கரையில் நேற்று 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கரை ஒதுங்கினார். அவருடைய உடல் அழுகிய நிலையில் இருந்தது.
இதை அறிந்த வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் காவல் குழும போலீசார் அங்கு சென்று உடலை பார்வையிட்டு விசாரணை நடந்தனர்.
அப்போது அவர் அணிந்திருந்த ‘டி-சர்ட்டில்’ இலங்கை நாட்டு கொடியின் படம் இருந்தது. இதையடுத்து ‘டி-சர்ட்டை’ போலீசார் கைப்பற்றினர். பின்னர் உடலை பிரேத பரிசோதனை செய்து அங்கேயே புதைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
பிணமாக கரை ஒதுங்கியவர் யார்? இலங்கையை சேர்ந்தவரா? மீன் பிடிக்கும்போது படகில் இருந்து தவறி விழுந்து இறந்தவரா? என்பது பற்றி வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.