குடியாத்தத்தில் லாரிக்கு அடியில் சிக்கி உயிர்த்தப்பிய சிறுவன்
குடியாத்தத்தில் சாலையை கடந்த சிறுவன் டிப்பர் லாரிக்கு அடியில் சிக்கி அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினான். இந்த காட்சிகள் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குடியாத்தம்
சிறுவன் மீது லாரி மோதல்
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள டவுன் பிச்சனூர்- பலமநேர் சாலை எப்போதும் வாகன நெரிசல் மிகுந்ததாக உள்ளது.
இந்த சாலை வழியாகத்தான் ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களுக்கு வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பலர் இறந்தும், படுகாயமடைந்த சம்பவங்களும் நடந்துள்ளன.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இந்த சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது லாரியில் சிக்கி இறந்தார்.
இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகே நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் 7 வயது சிறுவன் ஒருவன் சாலையின் ஒருபக்கத்தில் இருந்து மறு பக்கத்திற்கு வேகமாக ஓடி வந்தான். அப்போது ஜல்லி கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக சிறுவன் மீது மோதியது.
உயிர்த்தப்பினான்
இந்த விபத்தில் சிறுவன் லாரியின் அடியில் சிக்கிக்கொண்டான். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் லாரியின் பின்பக்கத்தில் இருந்து அந்த சிறுவன் சிறு காயங்களுடன் எழுந்து வந்தான். லாரியின் நடுப்பகுதியில் சிக்கிக்கொண்டதால், லாரியின் சக்கரத்தில் சிக்காமல், அதிர்ஷ்ட வசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியது தெரியவந்தது.
அக்கம்பக்கத்தினர் அந்த சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அனுப்பிவைத்தனர். இந்த காட்சிகள் அப்பகுதியில் ஒரு கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
வைரலாகும் காட்சிகள்
இந்த பதிவுகளை அந்த கடைக்காரர் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனால் லாரியில் சிக்கிய சிறுவன் உயிர் தப்பிய காட்சி வைரலானது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின் பேரில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் அந்த சிறுவன் குறித்து விசாரித்தனர்.