வேலூரில் முதியவரை வீட்டுக்குள் தள்ளி விட்டு ரூ.3½ லட்சம் நகை, பணம் கொள்ளை

வேலூரில் நள்ளிரவு வீடு திரும்பிய மெக்கானிக்கை, கொள்ளையர்கள் வீட்டுக்குள் தள்ளிவிட்டு பீரோவில் இருந்த ரூ.3½ லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2021-07-08 14:02 GMT
வேலூர்

முதியவர்

வேலூர் சைதாப்பேட்டை தோபாசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 65), இருசக்கர வாகன மெக்கானிக். இவர் சென்னையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு பஸ் மூலம் வேலூர் திரும்பினார். 

புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஆட்டோவில் வீட்டுக்கு புறப்பட்டார். தெருவில் இறங்கி அவர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது பழனியை நோட்டமிட்ட 3 பேர் பின்தொடர்ந்து சென்றனர்.

பழனி வீட்டிற்குள் செல்வதற்காக கதவை திறந்தார். அப்போது திடீரென கண் இமைக்கும் நேரத்தில் கொள்ளையர்கள் 3 பேரும் பழனியை பிடித்து வீட்டுக்குள் தள்ளினர். அவர் எழுவதற்குள் உள்பக்கமாக கதவை பூட்டினர். 

மேலும் பழனியை தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் இருந்த சுமார் 7 பவுன் மற்றும் ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்தனர். கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த பழனி அலறினார். அந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் கொள்ளையர்கள் தப்பி விட்டனர். பின்னர் பழனியை அவர்கள் வேலூர் பென்ட்லேண்ட் மருத்துவமனையில் சேர்த்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், உதவி சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

கொள்ளையர்களை அடையாளம் காண சைதாப்பேட்டை பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 
 பழனி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.3½ லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்