மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்பிறகு அணையில் நீர்வரத்து குறைந்து கொண்டே வந்தது. அதாவது வினாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. அது மேலும் குறைந்து நேற்று முன்தினம் வினாடிக்கு 674 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 78.31 அடியாக இருந்தது.
இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதாவது வினாடிக்கு ஆயிரத்து 71 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 77.29 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்தை விட வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்புள்ளது.