ரூ.712 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக தனியார் நிறுவனம் மீது வழக்கு
பெங்களூருவில் உள்ள ஒரு வங்கியில் ரூ.712 கோடி கடன் பெற்று மோசடி செய்து விட்டதாக தனியார் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ஒரு வங்கியில் ரூ.712 கோடி கடன் பெற்று மோசடி செய்து விட்டதாக தனியார் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.712 கோடி மோசடி
பெங்களூரு கப்பன்பார்க் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கஸ்தூரி பா ரோட்டில் ‘எஸ்’ வங்கி செயல்பட்டு வருகிறது. அந்த வங்கியில் நிதேஷ் என்ற தனியார் நிறுவனம் சார்பில் ரூ.712 கோடி கடன் வாங்கப்பட்டு இருந்தது. அவ்வாறு வாங்கப்பட்ட கடனை திரும்ப செலுத்தாததுடன், வங்கியில் இருந்து பெறப்பட்ட கடனை வேறு காரணங்களுக்காக பயன்படுத்தி மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக நிதேஷ் என்ற தனியார் நிறுவனத்தின் மீதும், அதன் உரிமையாளர்கள் மீது கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் எஸ் வங்கியின் அதிகாரி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களை விசாரணைக்கு ஆஜராகவும் போலீசார் நோட்டீசு அனுப்பி வைத்துள்ளனர்.
விசாரணைக்கு ஆஜராக நோட்டீசு
இதுகுறித்து மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் அனுஜித் நிருபர்களிடம் கூறுகையில், பெங்களூருவில் உள்ள நிதேஷ் நிறுவனம் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு உள்ளது. அந்த நிறுவனம் பல்வேறு பணிகளை தொடங்குவதாக கூறி எஸ் வங்கியில் ரூ.712 கோடி கடன் பெற்றுள்ளது. ஆனால் அந்த கடனை முறையாக செலுத்தாமலும், கடனாக வாங்கிய பணத்தை வேறு சில காரணங்களுக்கு பயன்படுத்தி இருப்பதாகவும் வந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த நிறுவனத்தை சேர்ந்த உரிமையாளர்கள், உயர் அதிகாரிகள் உள்பட அனைவரின் மீதும் கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும் விசாரணைக்கு ஆஜராகும்படி நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு நோட்டீசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட ஆவணங்களை பரிசீலித்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.