குமாரசாமி-சுமலதா எம்.பி. இடையே மோதல் முற்றுகிறது

மண்டியா மாவட்டத்தில் சட்டவிரோத கல் குவாரிகள் விஷயத்தில் குமாரசாமி-சுமலதா எம்.பி. இடையே மோதல் முற்றி வருகிறது.

Update: 2021-07-07 21:11 GMT
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி
பெங்களூரு:மண்டியா மாவட்டத்தில் சட்டவிரோத கல் குவாரிகள் விஷயத்தில் குமாரசாமி-சுமலதா எம்.பி. இடையே மோதல் முற்றி வருகிறது.

மண்டியா தொகுதி

மண்டியா மாவட்டத்தில் சட்டவிரோதமான கல் குவாரிகள் விஷயத்தில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, மண்டியா தொகுதி எம்.பி. சுமலதா ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. குமாரசாமிக்கு பக்குவம் இல்லை என்று சுமலதா கூறினார். அதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நடிகை சுமலதா எம்.பி. குறித்து நான் கூறிய கருத்துகளை ஊடகங்கள் திரித்து வெளியிட்டுள்ளன. கடந்த 50 ஆண்டுகளாக ஊடகத்துறையினர் எவ்வளவு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர் என்பது எனக்கு தெரியும். கூட்டணி ஆட்சி இருந்தபோது, மக்களவை தேர்தலின்போது மண்டியா தொகுதி விஷயத்தில் ஊடகங்கள் எவ்வாறு செய்தி வெளியிட்டன என்பது எனக்கு தெரியும்.

சுமலதாவின் பண்பாடு

பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி.யை பார்த்து நான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சுமலதா கூறுகிறார். சுமலதாவின் பண்பாடு என்ன என்பது எனக்கு தெரியும். எங்கள் குடும்பத்தை உடைக்க சுமலதா முயற்சி செய்கிறார். தேவேகவுடாவின் குடும்பத்தை உடைக்க முயற்சி செய்தவர்கள் என்ன ஆனார்கள் என்பது எனக்கு தெரியும்.

கே.ஆர்.எஸ். அணையை சுற்றி 20 கிலோ மீட்டர் சுற்றளவில் கல் குவாரி தொழிலுக்கு தடை விதித்து உத்தரவிட்டதே நான் தான். மண்டியாவில் ஒரு எம்.பி.யாக அவர் என்ன பணிகளை செய்துள்ளார். கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மக்கள் இறந்தபோது, அவர் மண்டியாவுக்கு வரவில்லை. இப்போது கல் குவாரி தொழிலை பார்க்க அவர் மண்டியாவுக்கு சென்றுள்ளார். அவர் பணம் வசூலிக்க தான் அங்கு போய் இருக்கிறார்.

கரை புரண்டு ஓடுகிறது

எனக்கு கலாசார பாடத்தை அவர் எடுக்கிறாரா?. அவரிடம் இருந்து நான் அந்த பாடத்தை கற்க வேண்டுமா?. நடிகர் அம்பரீஷ் இறந்தபோது அவரது உடலை மண்டியாவுக்கு கொண்டு செல்லுமாறு நான் கூறினேன். அதற்கு அவர் வேண்டாம் என்று கூறினார். அத்தகையவர் மண்டியா பற்றியும், அம்பரீஷ் குறித்தும் பேசுகிறார். அவருக்கு வெட்கம் இல்லையா?.

உயிருடன் இருந்தபோது அம்பரீசை அவர் எவ்வாறு பார்த்துக் கொண்டார் என்று தெரியவில்லை. இப்போது அம்பரீஷ் மீது அவருக்கு அன்பு கரை புரண்டு ஓடுகிறது. சினிமாவில் நடித்தது போல் இங்கும் நடித்துவிடலாம் என்று அவர் கருதுகிறார். அம்பரீஷ் இறந்தபோது அவருக்கு எவ்வாறு மரியாதை கொடுத்தேன் என்பது மக்களுக்கு தெரியும். சட்டவிரோதமான கல் குவாரி குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.

கற்றுக்கொள்ள வேண்டும்

முன்னதாக நடிகை சுமலதா எம்.பி. மண்டியாவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், "குமாரசாமிக்கு தவறை திருத்தி கொள்ளும் பக்குவம் கிடையாது. தான் கூறியது தவறு என்று தெரிந்தாலும், அதை திருத்திக்கொள்ள மாட்டார். பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி.யை பார்த்து அவர் கற்றுக்கொள்ள வேண்டும். 

ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்கள் சிலர், எனக்கு எதிராக குண்டு போடுவதாவும், பீரங்கி போடுவதாகவும் கூறுகிறார்கள். உண்மையிலேயே அவர்கள் எம்.எல்.ஏ.க்களா? அல்லது பயங்கரவாதிகளா? என்று தெரியவில்லை. சட்டவிரோதமான கல் குவாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நான் கூறுகிறேன். இவர்களுக்கு ஏன் கோபம் வருகிறது" என்றார்.

மோதல் முற்றுகிறது

சட்டவிரோத கல் குவாரிகள் விஷயத்தில் குமாரசமி-சுமலதா எம்.பி. இடையே நாளுக்குநாள் மோதல் முற்றி வருகிறது. இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் செய்திகள்