வங்காளதேச பெண் கற்பழிப்பு வழக்கில் 5 வாரத்தில் போலீஸ் விசாரணை முடிந்தது

பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்திய வங்காளதேச இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் 5 வாரத்தில் விசாரணையை முடித்த போலீசார் கோர்ட்டில் ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரியை தாக்கல் செய்ய தயாராகி வருகிறார்கள்.

Update: 2021-07-07 20:46 GMT
பெங்களூரு: பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்திய வங்காளதேச இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் 5 வாரத்தில் விசாரணையை முடித்த போலீசார் கோர்ட்டில் ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரியை தாக்கல் செய்ய தயாராகி வருகிறார்கள். 

இளம்பெண் கூட்டு கற்பழிப்பு

பெங்களூரு ராமமூர்த்திநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்த வங்காளதேச நாட்டு இளம்பெண்ணை கடந்த மாதம் (ஜூன்) 5-க்கும் மேற்பட்டோர் கூட்டாக கற்பழித்திருந்தனர். அந்த இளம்பெணணை, அவர்கள் கற்பழிப்பதையும், அந்த இளம்பெண்ணின் மர்ம உறுப்பில் கொடூரமாக மதுபாட்டிலால் தாக்குவதையும் வீடியோ எடுத்திருந்தனர். அந்த வீடியோ காட்சிகள் வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பெண்கள் உள்பட 12 பேரை இதுவரை ராமமூர்த்திநகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கைதானவர்களில் 10 பேர் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களும், அந்த இளம்பெண்ணும் பெங்களூரு, கேரளாவில் விபசார தொழில் செய்து வந்தது தெரியவந்தது. மேலும் பணப்பிரச்சினையில் இளம்பெண்ணை கற்பழித்ததுடன், அவரை கொடூரமாகவும் தாக்கி இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

1,019 பக்க குற்றப்பத்திரிகை

இந்த நிலையில், இளம்பெண் கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக ராமமூர்த்திநகர் போலீசார் விசாரணையை முடித்துள்ளனர். அதாவது இந்த சம்பவம் நடந்திருந்த 5 வாரத்திற்குள் 12 பேரையும் கைது செய்திருப்பதுடன், விசாரணையை முடித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் போலீசார் தயாராகி உள்ளனர். அதன்படி, 12 பேர் மீதும் 1019 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தயார் செய்துள்ளனர். அந்த குற்றப்பத்திரிகையில் விபசார தொழில் விவகாரத்திலும், பணப்பிரச்சினை காரணமாகவும் இளம்பெண் கற்பழிக்கப்பட்டு இருப்பதுடன், கொடூரமாக தாக்கப்பட்டது குறித்தும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் கற்பழிப்பு தொடர்பாக 30 நபர்களை சாட்சியாக சேர்த்து இருப்பதுடன், அவர்கள் அளித்த தகவல்களையும் குற்றப்பத்திரிகையில் போலீசார் சேர்த்துள்ளனர். அத்துடன் இளம்பெண் அளித்த வாக்குமூலமும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் பெங்களூரு கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய ராமமூர்த்திநகர் போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகள்