ஈரோடு மாவட்டத்தில் 3 நாட்களுக்கு பின்னர் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம் 1,600 பேருக்கு போடப்பட்டது
ஈரோடு மாவட்டத்தில் 3 நாட்களுக்கு பின்னர் நேற்று கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. 1,600 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் 3 நாட்களுக்கு பின்னர் நேற்று கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. 1,600 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் தற்போது வரை 4 லட்சத்து 58 ஆயிரத்து 253 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். தடுப்பூசி போடும் முகாம்களில் பொதுமக்கள் இரவிலேயே வந்து இடம் பிடித்து காத்து நிற்கத்தொடங்கினர்.
இதனால், மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையிலும், சிரமமின்றி தடுப்பூசி போடுவதற்காகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுழற்சி முறையில் தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது. ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தினமும் 20 வார்டுகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
கோவிஷீல்டு 2-ம் டோஸ்
தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் கடந்த 4-ந் தேதி முதல் ஈரோடு மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் தடுப்பூசி போடும் மையத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த நிலையில் 3 நாட்களுக்கு பின்னர் நேற்று ஈரோடு மாநகர் பகுதியில் ஒரு இடம் உள்பட மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி 2-ம் டோஸ் மட்டும் போடப்பட்டது. அதன்படி ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது.
1,600 பேருக்கு போடப்பட்டது
இதையொட்டி நேற்று காலை முதலே பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்காக நீண்ட வரிசையில் ஏராளமானோர் காத்திருந்தனர். இதில் முதலில் வந்த 200 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. மீதமுள்ளவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மாநகர் பகுதியில் 200 பேருக்கும் புறநகர் பகுதியில் 1,400 பேருக்கும் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 1,600 பேருக்கு நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் முதல் டோஸ் யாருக்கும் செலுத்தப்படவில்லை. இதனால் முதல் டோஸ் தடுப்பூசி போட வந்தவர்கள் தடுப்பூசி போட முடியாமல் திரும்பிச்சென்றனர்.