ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

ஈரோடு மாவட்ட ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

Update: 2021-07-07 17:05 GMT
ஈரோடு மாவட்ட ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
கோபி
கோபி டவுன் அக்ரஹாரம் ஈஸ்வரன் கோவில் வீதியில் விசாலாட்சி, சமேத விஸ்வேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2 மாதங்களுக்கு பின்பு நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி நந்தீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்பட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
அதேபோல் விசாலாட்சி, விஸ்வேஸ்வருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
பச்சைமலை முருகன் கோவில்
இதேபோல் மாதேஸ்வரன் கோவில் வீதியில் அமைந்துள்ள ஈஸ்வரன் கோவிலில் மாதேஸ்வரர், மரகதவல்லி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கோபி பச்சைமலை முருகன் கோவிலில் உள்ள மரகத ஈஸ்வரனுக்கு, பால், தயிர், பன்னீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நந்தி வாகனத்தில் நடராஜர், சிவகாமி அம்பாள், கோவிலை சுற்றி வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோபி ஈஸ்வரன் கோவில், பாரியூர் அமரபணீஸ்வரர், மொடச்சூர் சோமேஸ்வரர், காசிபாளையம் காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் கோபி வட்டார பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
கொடுமுடி
கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மும்மூர்த்திகள் தலமான மகுடேஸ்வரர் வீரநாராயணப் பெருமாள் கோவிலில் ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு  நந்தி பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரங்கள் செய்யப்பட்டன. இதையொட்டி நந்திக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், திருமஞ்சனம், மஞ்சள் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதேபோல் மூலவர் மகுடேஸ்வரருக்கும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
சென்னிமலை
சென்னிமலை கிழக்கு தெருவில் உள்ள நர்மதை மருந்தீஸ்வரர் சாமிக்கு பிரதோஷ த்தை முன்னிட்டு நேற்று இரவு சரவண சாமி தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் நர்மதை மருந்தீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும் செய்திகள்