பொது இடங்களில் மதுகுடிப்பவர்களால் பொதுமக்கள் அவதி

பொது இடங்களில் மதுகுடிப்பவர்களால் பொதுமக்கள் அவதி

Update: 2021-07-07 15:35 GMT
போடிப்பட்டி:
பொது இடங்களில் மதுகுடிப்பவர்களால் பொதுமக்கள் அவதிப்படுவதால் அவர்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுப்பிரியர்கள்
மதுப்பிரியர்கள்  என்ற வார்த்தை தேசிய அடையாளமாக பெருமைப்படும் விதத்தில் உள்ளது. ஆனால் மது போதையில் மயங்கிக் கிடக்கும் குடிகாரர்களை சிலர் குடிமகன்கள் என்று அழைப்பது சகிக்க முடியாத விஷயமாக உள்ளது. அவர்களை மதுப்பிரியர்கள் என்று வேண்டுமானால் அழைக்கலாம். இத்தகைய மதுப்பிரியர்களால் பல குடும்பங்கள் வீதிக்கு வந்துள்ள நிலையில் இவர்கள் சாலையோரங்களிலும், சந்து பொந்துகளிலும் மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு அளித்து வருகின்றனர். 
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
மடத்துக்குளம், குமரலிங்கம் பகுதிகளில் கொரோனா ஊரடங்கால் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்த போது பல குடிகாரர்கள் குடிக்கு ஓய்வு கொடுத்திருந்தனர். இதனால் அவர்களும் அவர்கள் குடும்பத்தினரும் நிம்மதியடைந்தனர். ஆனால் மதுவுக்கு அடிமையானவர்ள் மட்டுமே பல இடங்களில் தேடித் திரிந்து கூடுதல் விலை கொடுத்து திருட்டுத்தனமாக வாங்கிக் குடித்து வந்தனர்.
பெண்கள் அச்சம்
இந்தநிலையில் அண்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டபோது பலரும் பல்வேறு சாகசப்பயணங்கள் செய்து செக்போஸ்ட் தாண்டி மது அருந்தினர். ஆனால் கடந்த 5-ந் தேதி முதல் திருப்பூர் மாவட்டத்திலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. இதனால் மதுப்பிரியர்கள் உற்சாகமாக மது குடித்து வருகின்றனர். ஆனால் உற்சாக மிகுதியால் இவர்கள் சாலையோரங்களிலேயே அமர்ந்து மது குடிப்பது பொதுமக்களுக்கு பல்வேறு விதமான இடையூறுகளை ஏற்படுத்துகிறது. 
குமரலிங்கம், மடத்துக்குளம் பகுதிகளில் முக்கிய சாலைகளை ஒட்டியே டாஸ்மாக் கடைகள் உள்ளது. தற்போது மதுப்பிரியர்கள் உட்கார்ந்து மது அருந்தும் வகையில் பார்கள் எதுவும் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் டாஸ்மாக் கடைகளில் மது வாங்கும் மதுப்பிரியர்கள் பலர் அதன் அருகிலேயே சாலையோரத்தில் அமர்ந்து குடிக்கத் தொடங்குகின்றனர். ஒரு சிலர் சற்று தொலைவு சென்று மரத்தடிகள், மறைவிடங்கள், நிழற்குடைகள் என்று ஏதாவது ஒரு பகுதியில் அமர்ந்து மது அருந்துகின்றனர். அத்துடன் மது போதையில் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்வது, ஆபாசமாக பேசுவது. ஆபாசமாக நடந்து கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
விபத்துகள் ஏற்படும் அபாயம் 
இதனால் அந்த வழியாக செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சமடையும் நிலை உள்ளது. அத்துடன் நெடுஞ்சாலை ஓரங்களில் வாகனங்களில் வரும் நபர்கள் மரத்தடிகளில் அமர்ந்து மது அருந்தி விட்டு, அவர்களே போதையுடன் வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அத்துடன் ஒருசில மதுப்பிரியர்கள் விளைநிலங்களில் அமர்ந்து மது அருந்தி விட்டு பாட்டில்களை அங்கேயே வீசி விட்டுச் செல்கின்றனர். இதனால் விவசாயிகள் காயமடைவதுடன் கடுமையான மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள். இதுதவிர ஒருசிலர் இரவு நேரங்களில் பள்ளி வளாகங்களுக்குள் அத்துமீறி நுழைந்து மது அருந்தும் சம்பவங்களும் நடைபெறுகிறது.
எனவே இதுபோன்று பொது இடங்களில் மது அருந்துபவர்களை போலீசார் கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியமாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
தற்போதைய நிலையில் ஒரு சிலரின் குடி வெறி தங்களுடைய குடும்பத்தை மட்டுமல்லாமல் அடுத்தவர்களின் குடும்பத்தையும் அழிக்கும் நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறது. மது குடிப்பவர்கள் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்த முடியாத நிலைக்குப் போய் விடுவதால் அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு போலீசாருக்கு உள்ளது.

மேலும் செய்திகள்