திருச்செந்தூருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரிசா பெண் கணவரிடம் ஒப்படைப்பு
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருச்செந்தூருக்கு வந்த ஒரிசா பெண் மற்றும் அவரது குழந்தை, கணவரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி:
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருச்செந்தூருக்கு வந்த ஒரிசா பெண் மற்றும் அவரது குழந்தை, கணவரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ஒரிசா பெண்
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருச்செந்தூரில் குழந்தையுடன் தனியாக வந்த கர்ப்பிணி பெண் பிளாச்சி என்பவர் சமூகநலத்துறை மூலம் மீட்கப்பட்டார். பின்னர் அவர் முடுக்கு மீண்டான்பட்டியில் உள்ள காப்பகத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டார்.
அவருக்கு கவுன்சிலிங் மூலம் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அவருடைய பெண் குழந்தை அங்கிதா அடைக்கலாபுரம் செயிண்ட் ஜோசப் குழந்தைகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தார். தொடர்ந்து 1 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. கவுன்சிலிங் மூலம் சுயநினைவு திரும்பிய பிளாச்சி தன்னுடைய விவரங்களை தெரிவித்தார்.
ஒப்படைப்பு
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் பல்வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அவரது கணவர் உசோகொய் என்பதும், அவர் ஒரிசா மாநிலம் போலாங்கி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் கண்டறியப்பட்டது.
அதன்பிறகு ஒரிசா மாநில போலீசார் உதவியுடன் கணவர் உசோகொய் தூத்துக்குடிக்கு வரவழைக்கப்பட்டார். அவருடன் ஒரிசா மாநில போலீசாரும் வந்தனர். தொடர்ந்து ஒரிசா போலீசார் முன்னிலையில், பிளாச்சி மற்றும் அவரது குழந்தைகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், கணவர் உசோகொய்யிடம் ஒப்படைத்தார். குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. அனைவரும் கேக் வெட்டி இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் நேரு, மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி செலின் ஜார்ஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரமநாயகம், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.