தஞ்சையில் தடை செய்யப்பட்ட 222 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - வாலிபர் கைது

தஞ்சை மாநகரில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட 222 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-07 14:17 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் நடவடிக்கை எடுக்க தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் தனிப்படை போலீசார் தீவிர சோதனை நடத்தி கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

அதன் பேரில் தஞ்சை நகர சிறப்பு தனிப்படையை சேர்ந்த சப்- இன்ஸ்பெக்டர் டேவிட் தலைமையிலான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன், ஏட்டுகள் சிங்காரவடிவேல், கோதண்டம் ஆகியோர் தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீஸ் நிலைய பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது தடைசெய்யப்பட்ட பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் 13 மூட்டைகளில் 222 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக திருச்சி மேலசிந்தாமணியை சேர்ந்த பாண்டியன் மகன் வினோத் (வயது 32) என்பவரை பிடித்தனர்.

இதையடுத்து தனிப்படை போலீசார் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் பிடிபட்ட வினோத்தையும் தஞ்சை மருத்துவகல்லூரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதன்பேரில் மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்