கல்குவாரிகளில் வெடி பொருட்களை பயன்படுத்தும்போது உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் கலெக்டர் தகவல்

கல்குவாரிகளில் வெடி பொருட்களை பயன்படுத்தும்போது உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்தார்.

Update: 2021-07-07 04:58 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி கல்குவாரி குத்தகைதாரர்களுடன் கலந்தாலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி கூறியதாவது:-

குவாரி குத்தகைதாரர்கள் குவாரிப்பணியின் போது அரசு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்தும் முறையாக பின்பற்ற வேண்டும். மேலும் பாதுகாப்பான முறையில் குவாரி பணி மேற்கோள்ள வேண்டும், கல்குவாரியில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு மற்றும் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும்.

வெடிபொருட்கள் உபயோகிக்கும்முன்

குறிப்பாக குவாரிகளில் வெடிபொருட்கள் உபயோகிக்கும்முன் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கால்நடைகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்தபின் பயன்படுத்தவேண்டும்.

குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்து கனிமங்களை கொண்டு செல்லும்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் கிராம சாலைகளில் நீர் தெளித்து புழுதி பறக்காவண்ணம் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்து செல்லும் வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவீட்டில் வாகனத்தின் கொள்ளளவு உயரத்திற்கு மட்டுமே களிமங்களை கொண்டு செல்லவும், வாகனத்தின் மேற்கூரையை தார்பாய் மூடியவாறு கொண்டு செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், காஞ்சீபுரம் வருவாய் கோட்ட அலுவலர் ராஜலட்சுமி, ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்ட அலுவலர் முத்துமாதவன், உதவி இயக்குனர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை விஜயராகவன், உதவி புவியியலாளர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை சுரேஷ்குமார் மற்றும் காஞ்சீபுரம் மாவட்ட குவாரி குத்தகைதாரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்