போலி சான்றிதழ் கொடுத்து 11-ம் வகுப்பில் சேர்ந்த விவகாரம்: எடப்பாடி அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர் மீது நடவடிக்கை-கல்வி அதிகாரிகள் விசாரணை
போலி சான்றிதழ் கொடுத்து 11-ம் வகுப்பில் சேர்ந்த விவகாரம் தொடர்பாக எடப்பாடி அரசு பள்ளி ஆசிரியர்கள், சம்பந்தப்பட்ட மாணவர் மீது நடவடிக்கை எடுக்க கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எடப்பாடி:
போலி சான்றிதழ் கொடுத்து 11-ம் வகுப்பில் சேர்ந்த விவகாரம் தொடர்பாக எடப்பாடி அரசு பள்ளி ஆசிரியர்கள், சம்பந்தப்பட்ட மாணவர் மீது நடவடிக்கை எடுக்க கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரசு பள்ளி
எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2018-19-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த மாணவர் ஒருவர் பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்தில் தோல்வி அடைந்துள்ளார். அதன் பின்னர் நடந்த தேர்விலும் ஆங்கில பாடத்தில் 31 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற வில்லை.
இதைத்தொடர்ந்து அந்த மாணவர் தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் ஆங்கில பாடத்தில் 31 மதிப்பெண்களை, 35 என்று திருத்தம் செய்து எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பில் சேர்ந்துள்ளார்.
போலி சான்றிதழ்
கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் வழக்கம் போல் செயல்படவில்லை. இந்த நிலையில் அனைவரும் தேர்ச்சி என்று அரசு அறிவித்ததால் கடந்த ஆண்டு 11-ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தார். இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு நடத்தப்படாமல், அனைவரும் தேர்ச்சி என்று அரசு அறிவித்தது. இதனால் மேற்கண்ட மாணவர் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மதிப்பெண் பட்டியல் தயாரிக்க சம்பந்தப்பட்ட மாணவனின், 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் சரிபார்க்கப்பட்ட போது அதில் எண்களால் 35 என்றும், எழுத்தால் 31 என்றும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் போலி சான்றிதழ் கொடுத்து அந்த மாணவர் 11-ம் வகுப்பில் சேர்ந்தது தெரியவந்தது.
நடவடிக்கை
இது குறித்த தகவலின் பேரில் எடப்பாடி கல்வி மாவட்ட அலுவலர் விஜயா எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அந்த மாணவர் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து மாணவர் மீதும், அதற்கு உடந்தையாக இருந்த ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் அதிகாரிகளுக்கு கல்வி மாவட்ட அலுவலர் விஜயா பரிந்துரை செய்தார்.
இதன் பேரில் சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கணேஷ்மூர்த்தி, அந்த மாணவரின் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை ரத்து செய்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், மாணவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.