காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் விரைவில் முடிக்கப்படும் கலெக்டர் தகவல்

காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் விரைவில் முடிக்கப்படும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-07-06 20:26 GMT
கரூர்
கரூர்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, மேலமாயனூர் காவிரி ஆற்றுப்பகுதியில் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 274 குடியிருப்புகளுக்கான காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருவதையும், வதியம், ரத்தினம்பிள்ளைபுதூர், வலையப்பட்டி, கள்ளை உள்ளிட்ட பகுதிகளில் குளித்தலை மற்றும் தோகைமலை ஒன்றியங்களுக்கான காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதையும்,  மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள காவிரி கூட்டுக் குடிநீர் திட்டமானது 56 ஆயிரத்து 150 மக்கள் தொகையை இலக்காக கொண்டு ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 55 லிட்டர் வீதம் கணக்கிட்டு, இடைநிலை ஆண்டுக்கு 4.50 மில்லியன் லிட்டர், உச்சநிலை ஆண்டுக்கு 5.31 மில்லியன் லிட்டர் வீதம் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தடி நீர் ஆதாரங்கள் பல இடங்களில் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை. மேலும் கோடை காலங்களில் ஆழ்துளை கிணற்றில் நீர் மட்டமானது மிகவும் கீழே சென்று விடுகிறது அல்லது வறண்டு விடுகிறது. எனவே தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் புதிய காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மொத்த திட்ட மதிப்பீடு ரூ.81 கோடியே 41 லட்சம் ஆகும். இதுவரை சுமார் 95 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு முதல்-அமைச்சரால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதேபோல, குளித்தலை மற்றும் தோகைமலை ஒன்றியங்களில் உள்ள 253 குடியிருப்பு பகுதிகளுக்கு ரூ.52 கோடியே 75 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ள காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் அனைத்தும் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த பொறியாளர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்