வாலிபர் கொலை வழக்கில் அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது

கிருஷ்ணராயபுரம் அருகே வாலிபர் கொலை வழக்கில் அண்ணன்-தம்பி உள்பட 3 பேரை மாயனூர் போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-06 20:20 GMT
கரூர்
கிருஷ்ணராயபுரம்
வாலிபர் கொலை
 கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த மாயனூர் காவிரியில் இருந்து பிரியும் கட்டளை மேட்டு வாய்க்காலில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு கலவை தயாரிக்கும் கூடத்தில் இருந்து லாரிகள் மூலம் சிமெண்டு கலவை தினமும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
 இந்தநிலையில் கடந்த 4-ந் தேதி லாரிக்கு வழி விடுவதில் இரு தரப்பினருக்கு இடைேய தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு தொடர்பாக நேற்று முன்தினம் பிச்சம்பட்டியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அந்த ஊரைச் சேர்ந்தவர்களும், பிரபு மற்றும் மேற்பார்வையாளர் தர்மதுரை அவரது ஆதரவாளர்கள் மணவாசியைச் சேர்ந்த இளைஞர்களும் கலந்து கொண்டனர். அப்போது தர்மதுரை ஆதரவாளர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பி மற்றும் அரிவாளால் பிரபுவை(35) தலை மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
 3 பேர் கைது
இறந்து போன பிரபு மற்றும் அவரை கொலை செய்தவர்கள் வேறு, வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மோதல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் மாயனூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக மணவாசியை சேர்ந்த கண்ணதாசன் மகன்கள் ராஜதுரை (26), தர்மதுரை (23) மற்றும் கிருஷ்ணன் மகன் அபிஷேக் என்கிற வேல்முருகன் (22) ஆகிய 3 பேரை மாயனூர் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை கிருஷ்ணராயபுரம் உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குளித்தலை சிறையில் அடைத்தனர்.
உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட பிரபுவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பிரபுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முத்தரையர் சங்க மாநில துணை செயலாளர் ராம் பிரபு உள்ளிட்டோர் வந்தனர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
 இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சங்க நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து பிரபுவின் உடல் போலீஸ் பாதுகாப்புடன் பிச்சம்பட்டியில் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்