கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

காரியாபட்டி அருகே கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமினை கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார்.

Update: 2021-07-06 20:04 GMT
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமினை கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார். 
கொரோனா தடுப்பூசி 
காரியாபட்டி தாலுகா மல்லாங்கிணறில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மூலம் கர்ப்பிணிகளுக்கான கொரோனா தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாமினை கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார். 
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
 முதல்-அமைச்சரின் தொடர் நடவடிக்கைகளின் காரணமாக தமிழகத்தில் கொேரானா தொற்று வேகமாக குறைந்து வருகிறது. அதேபோல் விருதுநகர் மாவட்டத்திலும் கொேரானா தொற்று பாதிப்பு குறைந்து வருவதுடன் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முன்னேற்றம் கண்டு வருகிறது. 
கர்ப்பிணி 
பொது மக்களிடம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் ஆர்வம் அதிகரித்து வருவதால் தினமும் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 
தமிழக அரசின் உத்தரவின் படி  கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் மல்லாங்கிணறில் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 12,492 கர்ப்பிணிகள் பயன்பெறுவர். கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாவட்டத்தில் உள்ள அனைத்து கர்ப்பிணிகளும் தவறாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்