அருந்தமிழர் பேரவை நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை

பள்ளிபாளையம் அருகே அருந்தமிழர் பேரவை நிர்வாகி சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2021-07-06 19:03 GMT
பள்ளிபாளையம்
 பள்ளிபாளையம் அருகே அருந்தமிழர் பேரவை நிர்வாகி சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
இந்த பயங்கர கொலை சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
அருந்தமிழர் பேரவை
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே காவிரி கரட்டங்காடு பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 48). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அருந்தமிழர் பேரவை என்ற அமைப்பை உருவாக்கி அதன் பொதுச்செயலாளராக இருந்து வந்தார்.
இவர், வீட்டின் முன்பு உள்ள மாரியம்மன் கோவில் திடலில் தூங்குவது வழக்கம். அதேபோன்று நேற்று முன்தினம் இரவும் தூங்க செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்தார்.
ரத்த வெள்ளத்தில் பிணம்
நேற்று அதிகாலையில் தனது வீட்டு முன்பு உள்ள சிமெண்டு இருக்கையில் ரவி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் தலை, கழுத்து, கை, கால் என அனைத்து இடங்களிலும் பலத்த வெட்டுக்காயம் இருந்தது. 
அதிகாலையில் எழுந்த அக்கம் பக்கத்தினர் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ரவி கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அவருடைய மனைவி, மகன் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது உருக்கமாக இருந்தது.
இந்த கொலை சம்பவம் பற்றிய தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. ஏராளமானவர்கள் அங்கு திரண்டதால் திடீர் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.
டி.ஐ.ஜி. விசாரணை
தகவல் அறிந்த சேலம் சரக டி.ஐ.ஜி. மகேசுவரி, போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ரவியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
கொலை நடந்த இடத்துக்கு போலீஸ் மோப்பநாய் சீமா வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த கொலை தொடர்பாக பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மர்ம கும்பல் வெறிச்செயல்
போலீசாரின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-
நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் தூங்க செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்த ரவி, அங்குள்ள சிமெண்டு இருக்கையில் அமர்ந்துள்ளார். அப்போது ஒரு கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவரை சுற்றி வளைத்துள்ளது. அவர் சுதாரிப்பதற்குள் அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது.
இதில், அவரது உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்தது. இதனால் அந்த கும்பலின் கொலைவெறி தாக்குதலில் இருந்து ரவியால் மீள முடியவில்லை. அப்படியே இருக்கையிலேயே அவர் பிணமாகி உள்ளார். ரவி இறந்ததை உறுதி செய்த பிறகு அந்த கும்பல் அங்கிருந்து சாவகாசமாக தப்பி சென்றுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
காரணம் என்ன? 
ரவி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை. ஏதாவது முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதும் பிரச்சினையில் இந்த கொலை நடந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மேலும் மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொலையாளிகளை வலைவீசி தேடிவருகிறார்கள்.
ரவி, அருந்தமிழர் பேரவை பொதுச் செயலாளராக இருந்ததாலும், கொலை நடந்த இடத்தில் பதற்றம் நிலவுவதாலும், அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
கொலையுண்ட ரவிக்கு, மலர்மினி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. மகன், ஒரு கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

மேலும் செய்திகள்