வாணியம்பாடியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.3 லட்சம் குட்கா பறிமுதல்
வாணியம்பாடியில் குடோனில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள பான்பராக், குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
வாணியம்பாடி
மூட்டை மூட்டையாக பான்பராக்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவில் பான்பராக், குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்திக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் வாணியம்பாடி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு குடோனில் தனிப்படை போலீசாருடன் சோதனை செய்தார்.
அப்போது குடோனில் மூட்டை, மூட்டையாக பான்பராக் மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த முஸ்தபா என்பவரின் மகன் தாஜூதீன் (வயது 38), மருத்துவர் காலனி பகுதியை சேர்ந்த சலாவுதீன் மகன் பிஸ்மில்லா (37) ஆகிய இருவரும் அதை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
2 பேர் கைது
அதைத்தொடர்ந்து பான்பராக் மற்றும் குட்காவை பறிமுதல் செய்த போலீசார், தாஜூதீன், பிஸ்மில்லா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவற்றை வாணியம்பாடி மற்றும் சுற்றுப்பகுதி முழுவதும் சப்ளை செய்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி செல்வம், டவுன் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக குடோன் உரிமையாளர் கிருஷ்ணன், கட்டிட உரிமையாளர் செல்வராஜ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.