தடுப்பணைகள் கட்டி தமிழகத்தின் நீர் உரிமைகளை பறிக்கிறது கர்நாடக அரசு ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

தடுப்பணைகள் கட்டி தமிழகத்தின் நீர் உரிமைகளை கர்நாடக அரசு பறிக்கிறது என்று கடலூரில் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

Update: 2021-07-06 17:35 GMT
கடலூர், 

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி கடலூர், விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடலூரில் நடந்தது. இதில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். 

முன்னதாக ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாளை கொரோனா விழிப்புணர்வு நாளாக கொண்டாட இருக்கிறோம். அதன்பிறகு களத்தில் இறங்கி ஆட்சியாளர்களின் நிறைகுறைகளை மக்களிடம்
 தெரியப்படுத்துவோம்.

தமிழக மக்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி அவசியம். அதை தடையின்றி மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும்.
 தொடர்ந்து கர்நாடக அரசு கட்டும் தடுப்பணைகள் தமிழகத்திற்கான நீர் உரிமைகளை பறிக்கிறது. தற்போது தென்பெண்ணையாற்றின் கிளை நதிகளில் தடுப்பணை கட்டுவது, தமிழகத்திற்கு நீர் வரத்தை பெருமளவு குறைத்து விடும்.

பெட்ரோல் விலை

இதனால் வேலூர், கடலூர். விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்படும். கர்நாடக அரசு மத்திய அரசின் அனுமதி, தமிழக அரசின் உரிமை இவற்றை கவனத்தில் கொண்டு முறையாக செயல்பட வேண்டும். தடுப்பணைகள் கட்டக்கூடாது.

 தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை நிலை நாட்ட மத்திய அரசும், நீர் மேலாண்மை ஆணையமும் வலியுறுத்த வேண்டும். ராமசுவரம் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதலை தடுக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் வரியை குறைத்தால் ஓரளவு விலை குறைய வாய்ப்பு உள்ளது. உள்ளாட்சி தேர்தலால் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிந்த பிறகு தேர்தலை நடத்த வேண்டும். 

தற்போதைய தி.மு.க. அரசு நிறை, குறைகளை தாண்டி மக்களுக்கான பணியை செய்ய வேண்டும். கடந்த ஆட்சியில் மின் மிகை மாநிலமாக தமிழகம் இருந்தது. தற்போது மின் தடைக்கு மின்துறை அமைச்சர் சில காரணங்களை கூறி இருக்கிறார். ஆனால் மக்கள் எதிர்பார்ப்பது தடையின்றி மின்சாரம்.

நீட் தேர்வு

நீட் தேர்வை பொறுத்தவரை, கல்வியில் அரசியல் கூடாது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முன்பு மாணவர்கள் நீட் தேர்வுக்கு குழப்பம் இல்லாத மன நிலையில் தயாராக வேண்டும். இதை அரசியல் தலைவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் பூரண மதுவிலக்கிற்கு வாய்ப்பு இல்லை.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

மேலும் செய்திகள்